காணியற்ற மலையக மக்களுக்கு வழங்குவதற்கு காணி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - மனோ
பெருந்தோட்டத் தரிசு காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கத்தின் பெருந்தோட்ட அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
பெருந்தோட்ட தரிசு காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வரும் அரசாங்கம், அதே காணிகளை காணியற்ற மலையக மக்களுக்கு வழங்குவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மலையக மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிப்பதாக வாக்குறுதி வழங்கிய அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒரு அங்குல காணியைக்கூட ஒதுக்கீடு செய்யத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முலையக மக்களின் காணி உரிமை சர்ச்சை தொடர்பில் 06-11-2026அன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் வெளியிடப்பட்ட மலையக சாசனத்தில், பெருந்தோட்டத் தரிசு காணிகளை மலையக இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நாம் வலியுறுத்தியிருந்தோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த மலையக சாசனத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. குறித்த ஒப்பந்தத்தில் எமது கூட்டணியின் தலைவரும் பிரதித் தலைவர்களும் கைச்சாத்திட்டிருந்தனர்.
அதேபோன்று, 2023 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியின் அட்டன் பிரகடனத்திலும் பெருந்தோட்டத் தரிசு காணிகளை மலையக மக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், இரண்டு ஆண்டுகள் கடந்தும், ஆட்சிக்கு வந்த பின்னரும் காணியற்ற மலையக மக்களுக்கு ஒரு அங்குல காணியைக்கூட ஒதுக்கீடு செய்ய இந்த அரசாங்கம் தவறியுள்ளது.
மறுபுறம், பெருந்தோட்ட தரிசு காணிகளில் குடிசைகளை அமைத்து குடியிருக்க முயற்சித்த காணியற்ற ஏழை மலையகக் குடும்பங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின. இச்சம்பவங்கள் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பித் தலையிட்டதையடுத்து, பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸ் அமைச்சர், பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்வாறானதொரு சூழலில், அதே பெருந்தோட்டத் தரிசு காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கத்தின் பெருந்தோட்ட அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த முரண்பாடு தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நான் கேள்வியெழுப்பியதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தையும் சபையில் சமர்ப்பித்தேன். எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஜனாதிபதி ஆற்றவுள்ள கொள்கை உரையில் இதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இதற்கிடையில், பெருந்தோட்ட அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம், அமைச்சரவையின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் குறித்த அமைச்சில் அவருக்கு உள்ள அதிகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனினும், தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி உள்ளதா, இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை அல்ல. அதனை நாம் கேள்வியாக முன்வைக்கவில்லை. பெருந்தோட்ட தரிசு காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும் என்றால், அதே காணிகளை காணியற்ற மலையக மக்களுக்கு ஏன் ஒதுக்கீடு செய்ய முடியாது என்பதே எமது கேள்வியாகும்.
மலையக மக்களுக்கு காணிகளை ஒதுக்கீடு செய்து வழங்குவதாக சந்திக்குச் சந்தி பறையடித்துக் கூறினீர்கள் அல்லவா? அவ்வாறு வாக்குறுதி வழங்கிய பின்னரும் ஏன் அதனை நிறைவேற்றவில்லை? யார் யாரை ஏமாற்றுகின்றீர்கள், தோழர்களே? என மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டினார்.





