யாழ்.மாநகர சபையின் நிர்வாக அலட்சியப்போக்கை கண்டித்து சிவஞானம் முதல்வருக்கு கடிதம்
யாழ்.மாநகரசபையின் நேற்று முன்தினம் (05-11-2026) பொதுச்சபை கூட்டத்தில் மாநகரசபை காணிகள் தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான 25கோடி ரூபா பெறுமதியான காணியொன்று மோசடியாக அபகரிக்கப்பட்டமை தொடர்பில் மாநகர நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது எனச் சுட்டிக்காட்டி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அக்கட்சியின் ஆட்சியில் உள்ள சபையின் முதல்வர் வி.மதிவதனிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
'யாழ்.மாநகரசபையின் காணி' அபகரிப்பு எனும் தலைப்பில் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ். முன் வீதி அல்லது இராசேந்திர பிரசாத் வீதியின் மேற்குப்புறமாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டட காணிக்கு கிழக்காக யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உரித்தான நிலப் பரப்பு 04 குளி 09 விஸ்தீரணம் கொண்ட காணி மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தேர்தல் மூலமான சபை பதவி ஏற்ற 2025 ஜூன் மாதம் முதல் நான் சுட்டிக் காட்டி வந்த போதும் காத்திரமான எந்த நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படாமை மிகவும் வருத்தத்திற்கு உரியது.
ஆகக் குறைந்தது இருபத்தைந்து கோடி பெறுமதியான இந்த சொத்து மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது.
இது இவ்வாறு இருக்கையில் யாழ்.மாநகரசபையின் நேற்று முன்தினம் (05-11-2026) பொதுச்சபை கூட்டத்தில் மாநகரசபை காணிகள் தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட விடயத்தை வெகு முக்கியம் வாய்ந்த விடயமாக எடுத்துடுத்து இந்த குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன் அடுத்த நான்கு வாரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய முன்னேற்றத்தை எமக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளது.





