புதிய பிரேரணைக்கு சீனா எதிர்ப்பு; ஜப்பான், கொரியா நடுநிலை
சில நாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் பேரவை தலையிடக்கூடாது என வலியுறுத்தின.
இணையனுசரணை நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணையின் ஊடாக இலங்கை தொடர்பில் பேரவையும், உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கொண்டிருக்கும் ஆணை காலநீடிப்பு செய்யப்படுவது பற்றி உறுப்புநாடுகள் சில வரவேற்பு வெளியிட்ட அதேவேளை, மேலும் சில நாடுகள் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அந்நாட்டின் உள்ளக விவகாரங்களில் பேரவை தலையிடக்கூடாது என வலியுறுத்தின.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, நேற்று திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இதன்போது புதிய பிரேரணை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் வருமாறு:
சீனா
மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலுக்கு விரோதமாக நிறைவேற்றப்படும் பிரேரணைகளை நாம் நிராகரிக்கின்றோம். இப்பிரேரணையின் பிரகாரம் இலங்கை தொடர்பான ஆணையை மேலும் காலநீடிப்பு செய்வதன் ஊடாக எந்தவொரு பெறுபேறும் கிட்டாது. எனவே இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்களின் அடிப்படையில் மனித உரிமைகள் பேரவை செயற்படவேண்டும்.
கொரியா
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம். இம்முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்பவற்றுடனான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுமாறு வலியுறுத்துகின்றோம்.
ஜப்பான்
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இன்றியமையாதனவாகும். அதன்பிரகாரம் உயர்ஸ்தானிகரின் விஜயத்துக்கு அனுமதி அளித்தமையைப் பாராட்டுகின்றோம்.
எதியோப்பியா
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தல் என்ற இலக்கினை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளின்போது அந்நாட்டின் இறையாண்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் அதன் உள்ளக விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகள் உரியவாறு பேணப்படவேண்டும். அதன்படி இலங்கையின் விருப்பத்துக்கு முரணான வகையில் வெளியகப்பொறிமுறை மேலும் காலநீடிப்பு செய்யப்படுவது குறித்து எமது கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.





