வடக்கு, கிழக்கு, மலையகப் பிரிநிதிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் விசேட சந்திப்பு
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதி வாழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கை வாழ் மக்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தி, எவ்வித பேதங்களுமின்றி அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர், இனம், மதம், மாகாணம், மாவட்டம் அல்லது கிராமம் என எவ்விதப் பிரிவினையுமின்றி ஒட்டுமொத்த மக்களும் இலங்கையர்களாகக் கைக்கோர்க்க வேண்டியது இக்காலத்தின் கட்டாயத் தேவையாகும். தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. குறுகிய பேதங்களைக் கடந்து மனிதநேயத்தை முதன்மைப்படுத்தி அனைவரும் செயலாற்ற வேண்டும்.
மேலும், இனக்குழுக்களின் பின்னணியைக் கொண்டு மக்களைப் பிரிக்காமல், நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளின் உரிமைகள், கௌரவம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதே உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு அடிப்படையாகும் என்றார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதி வாழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா ஆனோஜன் என்பவரின் விவகாரம் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கவனம் செலுத்தினார். ஒரு இலங்கையராக அவரது உயிரைப் பாதுகாக்கவும், அவருக்குத் தேவையான சட்ட மற்றும் இராஜதந்திர தலையீடுகளை அரசாங்கமும் தரப்பினரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.





