ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் 17 ஆம் ஏற்பாடுக்கு மக்கள் வாக்கெடுப்பு தேவை - சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன
அரசியலமைப்பின் 13(2)ஆம் உறுப்புரையும் இந்த தீர்மானத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஊழல் எதிர்ப்பு (திருத்தச் ) சட்டமூலத்தில் ஒருசில ஏற்பாடுகள் அரசியலமைப்பு பிரிவுகளுடன் முரண்படுகிறது. ஆகவே அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதேபோல் சட்டமூலத்தின் 17 ஆம் ஏற்பாடு அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதுடன், மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 22-09-2026அன்று நடைபெற்ற அமர்வின்போது நீதிமன்ற வியாக்கியானத்தை அறிவித்தார்.
அவர் மேலும் அறிவித்ததாவது, ஊழல் எதிர்ப்பு (திருத்தச்)சட்டமூலத்தின் சட்டமூலத்தின் 3,4,6(4)மற்றும் 6(5) ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல.எனவே இதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.
சட்டமூலத்தின் 6(7) வாசகம், அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1)மற்றும் 14(1)(அ) உடன்
முரண்படுகிறது மற்றும் அரசியலடைப்பின் 84(2) உறுப்புரைக்கு இணங்க விசேட பெரும்பான்மை ஒன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும்.
சட்டமூலத்தின் 7 ஆவது வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் முரண்படுகிறது.எனவே,உறுப்புரை 81(உ)ஐ நீக்குவதற்கான முன்மொழிவு திரும்பப் பெறப்பட வேண்டும். 7 ஆவது வாசகம் அதன் தற்போதைய வடிவிலேயே தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக இருந்தால் அரசியலமைப்பின் 82(5)ஆம் உறுப்புரையுடன்
பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) அல்லது உறுப்புரை 14அ(1)க்கு முரண்படாத வகையில், உறுப்புரை 88(1)(ஊ) பிரிவை முன்மொழியும் சட்டமூலத்தின் வாசகம் 11(1) உள்ளது. ஆகவே அதனை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.
பாராளுமன்ற குழுநிலையில் திருத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளவாறான சட்டமூலத்தின் 11(2) ஆம் வாசகம், அரசியலமைப்பின் 10,12(1), 14(1)(அ) அல்லது 14அ ஆகிய உறுப்புரைகளுக்கு முரண்படவில்லை.ஆகவே அவற்றை பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.
இச்சட்டமூலத்தின் 17ஆம் வாசகம், அரசியலமைப்பின் 3ஆம் உறுப்புரையுடன் சேர்த்துப் படிக்கப்படும் 4(இ)ஆம் உறுப்புரைக்கு முரண்படுகிறது. அரசியலமைப்பின் 13(2)ஆம் உறுப்புரையும் இந்த தீர்மானத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
எனவே 17ஆம் வாசகத்தை அதன் தற்போதைய வடிவில் சட்டமாகுவதற்கு, அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையின் பிரகாரம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன்,அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையின் பிரகாரம் மக்கள் வாக்கெடுப்பினால் மக்களால் அங்கீகரிக்கப்படவும் வேண்டும் .





