எதிர்க்கட்சித்தலைவருடன் ஜப்பான் தூதுவர் சந்திப்பு
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான் வழங்கி வரும் நீண்டகால நட்பு மற்றும் அளப்பரிய பங்களிப்புகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது மற்றும் நிலையான அபிவிருத்தியை எட்டுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாட்டாவுக்கும் இடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் வளங்கள், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளல், அனர்த்த அபாய மேலாண்மை மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு கூட்டுறவை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, ஜப்பானின் நவீன தொழில்நுட்ப அனுபவங்களைப் பயன்படுத்தி நாட்டின் விவசாயம், கடல்சார் தொழில்கள், நிலையான மீன்பிடித்துறை மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேம்படுத்துவது தொடர்பில் இருதரப்பும் விசேட கவனம் செலுத்தின.
மேலும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு இடையே அறிவைப் பகிர்ந்துகொள்வதுடன், தொழிற்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
அனர்த்த முன் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய உள்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஜப்பானின் அனுபவங்களைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான் வழங்கி வரும் நீண்டகால நட்பு மற்றும் அளப்பரிய பங்களிப்புகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை பலப்படுத்தி, இலங்கை மக்களின் நல்வாழ்வு மற்றும் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தொடர்ந்து இணைந்து செயற்பட இதன்போது இணக்கம் காணப்பட்டது.





