சுரேஷ் சலேவுக்கு நியாயம் வழங்குங்கள் - அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கோரிக்கை
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் மனைவி, கண்டி அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்குப் பொருத்தமான முறையில் சாதகமான நிவாரணங்களை வழங்குமாறு அஸ்கிரி மகா விகாரையின் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் மனைவி, கண்டி அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு நியாயமான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவுமாறு அவர் என்னிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் ஜனாதிபதியான உங்களின் அவதானத்திற்கு கொண்டு செல்வதற்காக அவர் என்னிடம் ஒப்படைத்த கோரிக்கை மனுவின் பிரதி ஒன்றையும் இக்கடிதத்துடன் இணைத்து உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.
எனவே, சுரேஷ் சலேயின் மனைவியால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகளை உங்களது தனிப்பட்ட அவதானத்திற்கு எடுத்துக்கொண்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்குப் பொருத்தமான முறையில் சாதகமான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.





