முன்னாள் சபாநாயகர் ரன்வல கைதாகி பிணையில் விடுதலை
மேலதிக சிகிச்சைக்காக குறித்த குழந்தை கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இரு பெண்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவனயீனமாக வாகனத்தை செலுத்தி 6 மாத பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வலவை பிணையில் செல்வதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
சந்தேகநபரான அசோக்க ரன்வலவுக்கு தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவரமண்டிய தெனிமுல்ல பகுதியில் 11-12-2025 அன்றுஇரவு 7.45 மணியளவில் முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளானது.
குறித்த ஜீப் வண்டி சென்ற அதேதிசையில் முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறம் மோதி எதிர் திசையிலிருந்து வந்த காருடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் காரில் பயணித்த 6 மாதங்கள் பூர்த்தியான பச்சிளம் குழந்தை, குழந்தையின் தாய் (25) மற்றும் பாட்டி(55) ஆகிய மூவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து காயமடைந்த பச்சிளம் குழந்தை, இரு பெண்கள், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக் ரன்வல ஆகியோர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மேலதிக சிகிச்சைக்காக குறித்த குழந்தை கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இரு பெண்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல கவனயீனமாக வாகனத்தை செலுத்தியமை மற்றும் விபத்தை தவிர்க்க தவறியமை, காயமேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 12-12-2025 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு நேரில் சென்றிருந்த மாளிகாகந்த நீதிவான் சந்தேகநபரான அசோக்க ரன்வலவுக்கு தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கினார். மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தார்.





