சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு டிசம்பர் 08ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
கடந்த ஜூன் 19 ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்திருந்தனர்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் 10-11-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் வழக்கின் பிரதான சாட்சிகள் விசாரணை ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது, 3ஆவது சாட்சியும், 1ஆவது சாட்சியும் நீதிமன்றில் ஆஜராகித் தமது சாட்சியங்களைப் பதிவு செய்துகொண்டனர். அத்துடன், எதிர்வரும் வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு நீதிமன்றத்தால் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச, இழப்பீடு அலுவலகத்தின் முன்னாள் பணிப்பாளர் சேபாலிகா சமன் குமார மற்றும் மகாவலி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் நேற்று வழக்கு விசாரணைகளுக்காக மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், இலங்கை மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல பகுதியில் உள்ள காணி ஒன்றில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள் மே ஒன்பது வன்முறையின் போது சேதமடைந்திருந்தன. இதனைக் காரணம்காட்டி, இழப்பீடு அலுவலக அதிகாரிகள் மீது அழுத்தம் பிரயோகித்து, அந்தச் சொத்துக்களுக்காக 8,850,000 ரூபா (88 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா) பணத்தை இழப்பீடாக பெற்றுக்கொண்டதன் மூலம், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஜூன் 19 ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் பிரதான விதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டுத் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகளாக 30 நபர்களை மன்றில் ஆஜர்படுத்தவும், சான்றுப்பொருட்களாக 38 ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.





