பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க
வடிகான்கள் அடைபட்டுள்ள இடங்களாக அறுபது இடங்களைக் கண்டுபிடித்துள்ளதாக மேயர் தெரிவித்திருந்தார்.
கொழும்பு நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான பொறுப்பை கொழும்பு மாநகரசபை ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் 10-11-2026 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை பெய்த மழையின் காரணமாக களனி கங்கை அல்லது மஹாவலி கங்கை பெருக்கெடுத்து எத்தகைய வெள்ளப்பெருக்கும் ஏற்படவில்லை. அதற்கமைய கொழும்பு நகரம் நீரில் மூழ்கியமைக்கு நீர்ப்பாசன திணைக்களத்திற்கோ அல்லது மஹாவலி அதிகாரசபைக்கோ குற்றம் சுமத்தத் தேவையில்லை.
கொழும்பு நகரத்திலுள்ள பிரதான கால்வாய்களான சென். செபஸ்தியன் கால்வாய், வெள்ளவத்தை கால்வாய், கட்டு கால்வாய் போன்ற கால்வாய்களை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனமே நிர்வகிக்கிறது. இந்த எந்தவொரு கால்வாயிலும் கடந்த நாட்களில் பெய்த மழையின் காரணமாக எந்தவிதமான நீர் பெருக்கெடுப்பும் ஏற்படவில்லை. அதாவது, நில அபிவிருத்திச் கூட்டுத்தாபனத்துகுச் சொந்தமான கால்வாய்கள் தொடர்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.
ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்ன வென்றால், கொழும்பு மாநகரசபையினால் பராமரிக்கப்படும், கொழும்பு மாநகரசபையினால் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வடிகான் கட்டமைப்புக்கள் முழுமையாகத் தடைபட்டுள்ளதோடு, மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட புதிய வடிகான் கட்டமைப்புக்கள், நடை பாதைகள் என்பன கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பாரியளவில் தடைபட்டுள்ளமையாகும்.
அத்துடன் 129 மில்லிமீற்றர் என்ற மிக அதிகப்படியான மழைவீழ்ச்சியே வெள்ளப்பெருக்குக்கு காரணம் என அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த காலத் தரவுகளைப் பார்க்கும்போது, 1992 ஆம் ஆண்டில் 396 மில்லிமீற்றர் மழை பெய்தது. 2010 ஆம் ஆண்டும் 376 மில்லி மீட்டர் மழை பெய்து பாராளுமன்றம்கூட நீரில் மூழ்கியது. அதற்கமைய, வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் இதைவிட அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஆனால் கொழும்பில் அமையப்பெற்றுள்ள வடிகான் கட்டமைப்புக்கு 30 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்வதை தாங்கிக்கொள்ள முடியாது என மேயர் தெரிவித்திருந்தார். ஆனால், கொழும்பின் அனைத்து கால்வாய்களும் மணித்தியாலத்திற்கு 120 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில்தான் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தினசரி 476 மில்லி மீட்டருக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அத்தகைய மழை வீழ்ச்சி கடந்த காலப்பகுதியில் ஏற்படவில்லை. அப்படியானால், நகர சபையின் பொறுப்பும், ஜனாதிபதியின் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டமும் வார்த்தைகளுக்கும் சமூக வலைதளங்களுக்கும் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பது மிகவும் தெளிவாகிறது.
அத்துடன் வடிகான்கள் அடைபட்டுள்ள இடங்களாக அறுபது இடங்களைக் கண்டுபிடித்துள்ளதாக மேயர் தெரிவித்திருந்தார். இது யாருடைய தவறு? தவறு அந்த நகர சபையினுடையது. ஒருபுறம் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உரிய தரப்பினர், மறுபுறம் ஆளுங்கட்சியின், மக்கள் விடுதலை முன்னணியின், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள். அறுபது இடங்கள் அடைபட்டுள்ளதாக அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அவற்றை சுத்தம் செய்யாததற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே அரசாங்கம் இதற்கும் 76 வருட வரலாற்றைக் குறைசொல்லிப் பயனில்லை. இப்போது இவர்கள் நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. தற்போதைய அரசாங்கமே இவற்றுக்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும். ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு நகரின் பெருமளவான வியாபாரங்கள் அழிவடைந்துள்ளன. வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தனிப்பட்ட சொத்துக்களுக்குப் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் பொறுப்பை இந்த நகர சபை ஏற்று, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நட்டஈடு வழங்க வேண்டும். மாறாக பொய்களைக் கூறி தங்களின் தவறுகளை மூடிமறைக்க, கடந்த காலத்தை குறைசொல்லிப் பயனில்லை என்றார்.





