கனடாவில் கருமுட்டைகளை உறையவைக்கும் முறை கணிசமாகப் பிரபலமடைந்து வருகிறது
2022-ஆம் ஆண்டில் பிரசவத்தின்போதான சராசரி வயது 31.6 ஆக உயர்ந்ததாக கனடா புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
கனடா கருத்தரிப்பு மற்றும் ஆண் இனப்பெருக்கவியல் சங்கத்தின் (CFAS) தரவுகளின்படி, கருமுட்டைகளைச் சேகரித்து உறையவைத்துப் பாதுகாக்கும் நோக்கில் 2025-ஆம் ஆண்டில் 2,663 சுழற்சிகள் பதிவாகியுள்ளன. 2013-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 217 ஆக மட்டுமே இருந்தது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் கருமுட்டைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் சுமார் 775 கருமுட்டைகள் சேமிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு 22,000-க்கும் அதிகமான கருமுட்டைகள் உறையவைத்துப் பாதுகாக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.
இந்த உயர்வுக்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம், வாழ்க்கைத் துணை அமையாத நிலை ஆகியவை தங்களது கருத்தரிக்கும் திறனைப் பாதுகாத்து வைப்பதற்கான காரணங்களாக இருப்பதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.
"மருத்துவக் காரணங்கள் இல்லாமலேயே, தங்களது விருப்பத்தின் அடிப்படையில் கருத்தரிப்புத் திறனைப் பாதுகாத்துக்கொள்ளும் நடைமுறை நிச்சயமாக அதிகரித்து வருகிறது" என்று கனடா கருத்தரிப்பு மற்றும் ஆண் இனப்பெருக்கவியல் சங்கத்தின் தலைவர் டாக்டர் முகமது பெடாய்வி, சிபிசி நியூஸிடம் தெரிவித்தார். இங்கு 'விருப்பத்தின் அடிப்படையில்' என்பது மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளைக் குறிக்கிறது. உதாரணமாக, கருத்தரிக்கும் திறனைப் பாதிக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சைக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் கருமுட்டைப் பாதுகாப்பு நடைமுறைகள் இதில் அடங்காது.
கனடா முழுவதும் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட்டு வருவதும் கருமுட்டைகளை உறையவைத்துப் பாதுகாக்கும் நடைமுறை அதிகரிப்பதற்கான மற்றொரு காரணமாகும். 1976-ஆம் ஆண்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தாய்மார்களின் சராசரி வயது 26.7 ஆக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் பிரசவத்தின்போதான சராசரி வயது 31.6 ஆக உயர்ந்ததாக கனடா புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், பலர் கர்ப்பம் தரிப்பதைத் தள்ளிப்போட்டாலும், பெண்களின் கருத்தரிக்கும் திறன் குறிப்பிட்ட கால வரம்பைக் கொண்டது. கருமுட்டைகளின் தரம் மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து பெண்களின் கருத்தரிக்கும் திறன் படிப்படியாகக் குறைகிறது. பொதுவாக, 32 வயதில் இந்தக் குறைவு குறிப்பிடத்தக்க வகையில் தெரியத் தொடங்குகிறது. 35 வயதுக்குப் பிறகு அது மேலும் வேகமாகக் குறைகிறது.





