ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலத்துக்கு எதிராக மனுகள் மீதான விசாரணை நிறைவு
சட்டமா அதிபர் ஊடாக மேல் நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் ஒன்றினை சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் மீதான விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்படி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலம் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது குறித்த திருத்தங்கள் முன்வைக்கப்பட உள்ளதாக சட்டமா அதிபர் 10-11-2026 அன்று உயர் நீதிமன்றத்திற்கு தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.
அதற்கமைய, கைதுசெய்யப்படும் நபர் ஒருவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்துக் கொள்ள முடியும் எனச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடு, 48 மணித்தியாலங்களாக திருத்தப்படும் எனச் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றில் தெரிவித்தார்.
மேலும் , சட்டமூலத்தில் உள்ள மதுவரி சட்டம் தொடர்பான அனைத்துக் குற்றங்களும், பச்சை குத்துதல் மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல ஏற்பாடுகளும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள 26 மனுக்களை மீதான விசாரணை, மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் கடந்த 4ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மனுக்கள் தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதுக்காக (9) நேற்றைய தினம் மேற்படி மனுகள் பரிசீலனைக்க எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன விடயங்களை முன்வைக்கையில், “கனம் நீதிபதி அவர்களே! அரசாங்கத்தால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலமானது பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, தொடர்புடைய திருத்தங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த அவர், இந்தச் சட்டமூலம“ தொடர்பில் மனுதாரர்களால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன. அவை சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது சட்டமூலத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதுக்கு இனக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட சட்டமூலத்திற்குள் அடங்கியிருந்த மதுவரிச் சட்டம் தொடர்பான குற்றங்கள் நீக்குவதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, குறித்த சட்டமூலத்திற்குள் உள்ள அறிவுசார் சொத்துரிமைக் குற்றங்களில் பதிப்புரிமை தொடர்பான குற்றங்கள் மாத்திரம் நீக்குவதுக்கு இனக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சட்டமூலத்திற்குள் உள்ள நபர்களைக் கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்களைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன்போது, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ், “கனம் நீதியரசர் அவர்களே! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் சாதாரண குற்றங்களை விட மிகவும் சிக்கலானவை. உதாரணமாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினர் மேற்கொள்ளும் படுகொலைகளைக் கருத்திற்கொண்டால், அந்தப் படுகொலையைச் செய்வதற்குத் தீர்மானிப்பது ஒரு நபர்தான். எனினும், அந்தப் படுகொலையை மேற்கொள்ளும் துப்பாக்கி தாரியை அவர் அறிவதில்லை. ஆயுதத்தை வழங்குவது மற்றொரு நபர். இதன்மூலம் இந்தக் குற்றங்கள் எவ்வளவு சிக்கலானவை என்பது தெளிவாகிறது. இத்தகைய குற்றங்கள் தொடர்பில் செயற்படுவதற்குத் திறமையான சட்ட ஏற்பாடுகள், நவீன விசாரணை முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகளும் அவசியமாகின்றன. அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதுதான் இந்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதன் நோக்கமாகும் என்றார்.
இதன்போது, பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன சொலிசிட்டர் ஜெனரலை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். "இந்தச் சட்டமூலத்தின் 14ஆவது பிரிவு தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன? அதில் உள்ள ஏற்பாடுகளினால் வெகுசன ஊடக நடவடிக்கைகளுக்குத் தாக்கம் ஏற்படுவதாகக் கூறப்பட்டதே?"
இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், " கனம் நீதியரசர் அவர்களே!, இதில் 14ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது, பாரிய குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்பதாகும். பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பதற்காகவே இந்தப் பிரிவு உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14(3) பிரிவின் ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தது, பாரிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளுக்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். அந்தப் பிரிவு நீக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல், "இந்தச் சட்டமூலத்தின் 20ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, கைது செய்யப்படும் நபரொருவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்துக் கொள்ள முடியும் என்ற ஏற்பாடு 48 மணித்தியாலங்கள் எனத் திருத்தப்படுகின்றது.
அதன் பின்னர் குறித்த நபர் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். 21ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபரொருவரைத் தடுத்து வைப்பதற்காகத் தடுப்புக் காவல் உத்தரவுகளைக் கோருவது, பொலிஸ் மாஅதிபர் அல்லது பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பதவிக்குக் குறையாத நபரொருவரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டால், பொதுப் பாதுகாப்பு அமைச்சரைத் திருப்திப்படுத்தக் கூடிய காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், தொடர்புடைய தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்க வேண்டும். இரண்டு மாதங்கள் முதல் ஒரு வருடக் காலம் வரை தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்குவதற்குப் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.
இரண்டு மாதங்களை விடத் தடுப்புக் காவல் உத்தரவுகள் நீடிக்கப்படுமானால், அதற்காகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சரால் காரணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதுபோலவே, இரண்டு மாதங்களை விடத் தடுப்புக் காவல் உத்தரவுகள் நீடிக்கப்படுமானால், சட்டமா அதிபர் ஊடாக மேல் நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் ஒன்றினை சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு வழங்கும் தடுப்புக் காவல் உத்தரவுகளின் பிரதிகள் காவலில் உள்ள நபருக்கு வழங்கப்பட வேண்டும். ஒரு வருடத் தடுப்புக் காலத்தின் பின்னர் காவலில் உள்ள நபருக்கு மேல் நீதிமன்றத்திடமிருந்து பிணை கோரிக்கைகளை விடுக்க முடியும். அதற்கமைய, இந்தப் பிரிவுகளிலிருந்து கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் செயற்பாடு நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது , பச்சை குத்துதல் மற்றும் அடையாளங்கள்" தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவும் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”
"இந்த விடயங்கள் ஊடாகக் கைது செய்தல், தடுத்து வைத்தல், தடுப்புக் காவல் உத்தரவுகளை வழங்குதல், பிணை கோருதல் போன்ற விடயங்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுகின்றன. சட்டமூலத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது மேற்கொள்ளப்படவுள்ளன. சம்பந்தப்பட்ட சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்.
அதற்கமைய மேற்படி மனுக்கள் மீதான விசாரணை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமூலத்திற்குரிய திருத்தங்கள் தொடர்பான எழுத்துமூலச் சமர்ப்பணங்களை நாளை மாலை 4.00 மணிக்கு முன்னதாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அதன் பின்னர் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் வியாக்கியானம் பாராளுமன்றச் சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்தது.





