அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் அனில் ஜயந்த சந்திப்பு
நிதி அமைச்சில் நேற்றையதினம் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது.
இலங்கையின் பொருளாதார மாற்றத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளும் வர்த்தகமும் மிகவும் முக்கியமென வலியுறுத்திய இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கவும் நிதியியல் ஒழுக்கத்தைப் பேணவும் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையு பாரட்டியுள்ளார்.
நிதி அமைச்சில் நேற்றையதினம் தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில், தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அப்பால் சென்று, இலங்கையை ஒரு மேம்பட்ட வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாடப்பட்டது.
அத்துடன், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக சீரமைக்க முடிந்துள்ளதாக அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்த கருத்துக்களை இரு தரப்பும் பரிமாறிக்கொண்டதுடன், இலங்கையின் இந்த முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை வழங்குவதற்கும் அமெரிக்கத்தூதுவர் மேயர் சம்மதம் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தின் நிதியியல் ஒழுக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தூதுவர் மேயர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.





