முத்துராஜவெலவை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்போம்: பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
கடந்த 2ஆம் திகதி இந்த குழு கூடியது. அதில் பொலிஸாரும் பங்கேற்றிருந்தனர்.
முத்துராஜவெல பகுதியை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். அதனை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என உறுதியளிப்பதாக கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் முத்துராவெல பகுதியைப் பாதுகாத்தல் தொடர்பில் 05-02-2026 அன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நிறுவப்பட்டுள்ள பிரத்தியேகக்குழுவில், உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முத்துராஜவெல தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கி குறித்த உப குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அறிக்கை கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையை நாம் மாவட்ட ஒருங்கிணைப்புழு கூட்டத்திலும் சமர்ப்பித்தோம். இதனை எதிர்வரும் 17ஆம் திகதி சுற்றாடல் அமைச்சிற்கும் சமர்ப்பிக்கவுள்ளோம். அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அந்தவகையில் முத்துராஜவெல தொடர்பில் பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், ஏனைய துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகளை உள்ளடக்கி பிரத்தியேகக் குழுவொன்றை நிறுவுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு குழுவை நிறுவுதற்கும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி இந்த குழு கூடியது. அதில் பொலிஸாரும் பங்கேற்றிருந்தனர். இப்போது மாத்திரமின்றி எதிர்க்கட்சியிலிருந்த போதும், நாம் இதற்காக போராடியிருக்கின்றோம். பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்திருக்கின்றோம். இதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். எனினும் இப்போது நாம் அதிகாரத்திலிருக்கின்றோம்.
எனவே முத்துராஜவெல பகுதியை பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். அதனை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என உறுதியளிக்கின்றேன் என்றார்.





