டிசம்பர் மாதத்திற்குள் முட்டையின் விலை அதிகரிக்கக்கூடும்
சில பண்ணையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்க திட்டமிட்டுள்ளதால், விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முட்டையின் விலை 45 ரூபாவிலிருந்து 47 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் முட்டை உற்பிக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கிட்டத்தட்ட 20சதவீதத்தால் அதிகரித்தமையே முட்டையின் விலை படிப்படியாக உயர்வடைவதற்கான முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 32 ரூபாவிற்கும் 34 ரூபாவிற்கும் இடைப்பட்டதாக உள்ளதாகவும், அண்மைய நாட்களின் நிலவரப்படி பண்ணை விலை 35 ரூபாவாகவும் சந்தை விலை 40 ரூபாவாகவும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் உற்பத்திச் செலவினால் ஏற்பட்ட இழப்புகளைச் சமாளிப்பதற்காக சில பண்ணையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்க திட்டமிட்டுள்ளதால், விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக சுற்றுலா விடுதிகளில் அதிகரித்து வரும் கேள்விக்கு ஏற்ப விநியோகத்தை மேற்கொள்வதில் பற்றாக்குறை ஏற்படுவதால் விலைகளின் மேலும் அதிகரிப்பதற்கான அழுத்தத்தைக் கொடுக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், முட்டை மற்றும் கோழி இறைச்சியை பொதுமக்கள் எளிதில் பெற்றுக் கொள்ளக்கூடிய அவசியமான புரத மூலங்களாக மாற்றுவதற்காக, அவற்றின் மீதான வரிகளை குறைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு முட்டைக்கும் 9 ரூபாவிற்கும் 11 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகைக் வரியாக விதிக்கப்படுவதாகவும், கோழி மற்றும் முட்டையின் விலையில் சுமார் 25சதவீதம் வரியாக அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





