தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் வட,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் வவுனியா மாநகரசபை வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி வளாகத்தில் இடம்பெற்றது.
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிரென மதித்து ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரைக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 26-09-2026 அன்று வட,கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அரசியல்வாதிகள், சமயத்தலைவர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள், மாணவர்கள் என்று பலரும் பங்கேற்றிருந்தனர்.
நல்லூர்
யாழ்.நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அத்துடன் தியாக தீபம் உண்ணா நோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில் ஈகைச் சுடரினை இரு மாவீரர்களின் சகோதரியான சுப்பிரமணியம் மலர்விழி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் நினைவாலயத்தில் உள்ள தியாக தீபத்தின் திருவுருவச் சிலைக்கு மாவீரரின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை இளைஞன் ஒருவர் தூக்கு காவடி எடுத்து வந்து தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
நினைவு ஊர்திகள்
திலீபனின் சொந்த ஊரான யாழ். ஊரெழுவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நினைவூர்திப் பவனி பேரெழுச்சியுடன் புறப்பட்டு நல்லூர் நினைவாலயம் நோக்கி வந்திருந்தது. இதன்போது வீதியின் இருமருங்கிலும் மக்கள் ஒன்றுகூடி சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் தங்களது நினைவேந்தலைச் செலுத்தினர்.
அதேபோன்று கிளிநொச்சியிலிருந்தும் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்த்தியொன்று நல்லூரை வந்தடைந்திருந்தது.
அத்துடன், முல்லைத்தீவுவிசுவமடு, தேரவில் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி, நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட வளாகத்தை வந்தடைந்தது.
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான இந்த நினைவு ஊர்திப் பயணம் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை யாழ். வடமராட்சிப் பகுதியால் பயணித்து நல்லூரை சென்றடைந்தது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டன.
மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் வவுனியா மாநகரசபை வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி வளாகத்தில் இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, ஈகைச் சுடரேற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
திருகோணமலை
திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைமையில் சிவன் கோவிலுக்கு முன்பாக தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெற்று வந்த அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து இறுதி நிகழ்வு மாநகர சபை மண்டபத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பிரதான சுடரேற்றப்பட்ட பின்னர் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதைத்தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் நினைவுப்பேருரையை ஆற்றினார்.





