புதிய நாணய நிதிய ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை - சஜித் பிரேமதாச
வறுமையை ஒழித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் நலன்சார் புதிய ஒப்பந்தம் ஒன்று அவசியம்.
நாட்டின் வறுமையை ஒழித்து, ஏற்றுமதியை மேம்படுத்தி, விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 220 இலட்சம் மக்களுக்கும் நிவாரணம் வழங்கக்கூடிய புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் நாட்டுக்குத் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 26-09-2026 அன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதன் சுமை கோடிக்கணக்கான மக்களின் மீது அழுத்தத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீடிக்கப்பட்ட கடன் வசதி நிறைவடையும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திலிருந்து வெளியேறுவது பொருளாதார மீட்சி முழுமையடைந்ததன் காரணமாக அல்ல. இன்னும் பல குறைபாடுகள் காணப்படுகிறது.
அதேவேளை, 2027ஆம் ஆண்டில் நீடிக்கப்பட்ட கடன் வசதி விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ள நிலையில், இதனை மக்கள் ஆழமாகவும் முறையாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னர் கடன் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்தும் பேரண்டப் பொருளாதாரக் கட்டமைப்பு, போதுமான சேமிப்புகள், அரச நிதிச் சீர்திருத்தம் மற்றும் சர்வதேச சந்தை நம்பகத்தன்மையைப் பேணும் புதிய வேலைத்திட்டம் அவசியமாகும்.
2026ஆம் ஆண்டில் அரச கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 96 சதவீதமாகவும் இருக்கும். வெளிநாட்டுக் கடன் முறையே 51 மற்றும் 52 சதவீதமாக இருக்கும். கடன் மற்றும் வட்டி செலுத்துதல்களும் நாட்டின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க சுமையாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தையே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துகிறது. இதனால் மக்கள் மீதான பொருளாதார அழுத்தம் தொடர்கிறது.
மேலும், தற்போதைய ஒப்பந்தத்தைப் போன்று மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் ஒப்பந்தம் இனி தேவையில்லை. வறுமையை ஒழித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் நலன்சார் புதிய ஒப்பந்தம் ஒன்று அவசியம்.
அத்துடன், 2027ஆம் ஆண்டு நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திலிருந்து வெளியேறும் போது போதுமான வெளிநாட்டு சேமிப்புகள் நாட்டில் இருக்க வேண்டும். மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி மற்றும் வரிசை நிலை உருவாகாத வகையில் முன்கூட்டிய மாற்றுத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.





