மழையுடனான காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும்
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும். மழையுடனான காலநிலை நீடிக்கும் நிலையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை,கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் அவ்வப்போது இடையுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்யக்கூடும்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் கொழும்பு, காலி,களுத்துறை, கண்டி,கேகாலை,மாத்தறை,நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதனிலை மஞ்சள் நிற எச்சரிக்கை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கண்டி மாவட்டத்தில் உடபலாத்த பஸ்பகே கோறளை, தொலுவ, கங்க இஹல கோறளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை கிழக்கு, அம்பகமுவ,கொத்மலை வடக்கு,நோர்வூட் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.





