வெடுக்குநாறிமலைக்கு புத்தர் சிலையுடன் பௌத்த தேரர் வந்தமையால் பதற்றம்
ஆலய வளகாத்திலும் மலையின் கீழ் பகுதியிலும் அதிரடிப்படையினரும், பொலிஸாரும் தாராளமாக குவிக்கப்பட்டிருந்ததோடு வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, 26-09-2026 அன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக காலை முதலே ஒன்றுகூட ஆரம்பித்தனர்.
ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விவரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே பொலிஸாரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் உள்ளே சென்றபோது அங்கு பௌத்த தேரர் தலைமையில் வருகை தந்த குழுவினரும் நூற்றுக்கணக்கான மக்களும் வெடுக்குநாறிமலை ஆலய வளாகத்தில் புத்தர்சிலையை வைத்து பௌத்த மத வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தவாறு இருந்துள்ளனர்.
இதனால் அங்கு கூடியிருந்த இந்து மக்களிடையே அதிர்ச்சியும் எதிர்ப்பும் ஏற்பட்டது. அத்துடன் ஆதிசிவன் தேவஸ்தான வளாகத்திற்குள் பாதுகாப்புப் படையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பாதணிகளை அணிந்தவாறு நுழைந்தமையும் இந்து பக்தர்களிடையே அதிர்ச்சியையும் எதிர்ப்பதையும் ஏற்படுத்தியது.
மேலும் ஆலய வளகாத்திலும் மலையின் கீழ் பகுதியிலும் அதிரடிப்படையினரும், பொலிஸாரும் தாராளமாக குவிக்கப்பட்டிருந்ததோடு வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.
மலையின் உச்சியில் உள்ள ஆதிசிவன் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மலையின் உச்சிப்பகுதிக்கு அருகில் இருந்த பௌத்தர்களை கீழே செல்ல உத்தரவிடுமாறு பொலிஸாரிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வைத்தியர் பி. சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன் ஆகியோரும் வலியுறுத்தினர்.
இதற்குள் வனப்பதுகாப்பு அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோருக்கும் சட்டத்தரணி காண்டீபனுக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், வழிபாட்டிற்கு வரும் பொதுமக்களை வழியில் மறித்து இடையூறு செய்யாமல், அவர்கள் சுதந்திரமாகச் சென்று இறைவனை வழிபட அனுமதிக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தலைச் செய்தோடு புத்தர் சிலையை மலையின் உச்சிப்பகுதிக்கு அதாவது, ஆதிசிவன் காணப்படும் பகுதியில் வைப்பதற்கு அனுமதிக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருந்;தனர்.
இந்நிலையில் பௌத்ததேரர் தலைமையிலான குழுவினர் புத்தர் சிலையை மலையின் கீழ் பகுதியில் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நான்கு மணி வரையில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு அவ்விடத்தை வெளியேறிய நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஏனையவர்களும் அங்கிருந்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





