22 ஆவது திருத்தம் மக்கள் மத்தியில் தோல்வி - தயாசிறி ஜயசேகர
ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதை எதிர்க்கட்சியினர் எவரும் எதிர்க்கவில்லை.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் வெற்றிபெற்றுள்ளது, ஆனால் மக்கள் மத்தியில் தோல்வியடைந்துள்ளது.நிலுவையில் உள்ள 11 இலட்ச வழக்குகள் 2 ஆண்டுக்குள் விசாரிக்கப்படுமா அல்லது அரசியல் பழிவாங்கலுக்கான நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமையளிக்கப்படுமா என்பதை மக்கள் அறிந்துக் கொள்ளலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருநாகல் பகுதியில் 26-09-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் பாராளுமன்றத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் தோல்வியடைந்துள்ளது.
நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் அவசர அவசரமாகவே செயற்பட்டது. வெளிப்படையான எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. இந்த சட்டமூலங்களில் காணப்படும் குறைகளையும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளையும் சுட்டிக்காட்டியவர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.
பிணையில் உள்ளவர்களும், சந்தேக நபர்களும் தான் இவ்விரு சட்டமூலங்களையும் எதிர்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.அவ்வாறாயின் மகாநாயக்க தேரர்களும், சட்டத்தரணிகள் சங்கத்தினரும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினரும், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியும் பிணையிலா அல்லது சந்தேக நபராகவா உள்ளார்கள் என்பதை ஜனாதிபதி குறிப்பிட வேண்டும்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், நீதித்துறை (திருத்தச்) சட்டம் தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ளன. நீதிமன்ற கட்டமைப்பில் நிலுவையில் உள்ள 11 இலட்ச வழக்கு விசாரணைகள் இந்த இரண்டு ஆண்டுக்குள் நிறைவுப்படுத்தப்படுமா அல்லது அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கு முன்னுரிமையளிக்கப்படுமா என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ளலாம்.
ஊழலுக்கும், ஊழல்வாதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதை எதிர்க்கட்சியினர் எவரும் எதிர்க்கவில்லை. ஆனால் சட்ட ரீதியிலான செயற்பாடுகள் அரசியல் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டதாக அமைய கூடாது. அவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.





