திலீத் ஜயவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஆரம்பம்
எனது சேவை பெறுநர் ஜூன் 7 ஆம் திகதிதான் குறித்த கருத்தை வெளியிட்டார் என்பதை நீதிவான் எவ்வாறு தீர்மானிக்கிறார் என சட்டத்தரணி கேள்வி எழுப்பியிருந்தார்.
கோட்டை நீதிவானால் பாராளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 11-11-2026 அன்று மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரொஹந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, பிரதிவாதியான உதய கம்மன்பில சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா விடயங்களை முன்வைக்கையில், கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமையவே இந்த வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது தொடர்பில் எனது சேவை பெறுநர் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து ஊடாக நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு நீதிவான் முறைபாடு செய்திருந்த போதிலும், எனது சேவை பெறுநர் கடந்த ஜூன் 7 ஆம் திகதி குறித்த கருத்தை வெளியிட்டமைக்கு அந்த யூடியூப் காணொளியில் திகதியோ நேரமோ குறிப்பிடப்படவிலலை.
இவ்வாறானதொரு பின்னணியில், எனது சேவை பெறுநர் ஜூன் 7 ஆம் திகதிதான் குறித்த கருத்தை வெளியிட்டார் என்பதை நீதிவான் எவ்வாறு தீர்மானிக்கிறார் என சட்டத்தரணி கேள்வி எழுப்பியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது குறித்து விடுக்கப்பட்ட கருத்துக்கள் ஊடாக நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி, கோட்டை நீதிவான் இந்த முறையீட்டைச் சமர்ப்பித்துள்ளார்.





