அதிகரிக்கும் வெப்பம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
தாகம் ஏற்படாதவிடினும் அடிக்கடி தண்ணீர் அருந்துவதன் மூலம் ஏற்படக்கூடிய நீரிழப்பைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
வளிமண்டல மாற்றங்கள் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பம், மனித ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்புத் தொடர்பில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடரந்து தெரிவிக்கையில், பூமத்திய ரேகைக்கு அண்மையில் அமைந்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சூரியன் உச்சம் கொடுப்பதாலும், வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துள்ளமையாலும் சுற்றுப்புறச் சூழலில் வெப்பநிலை குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்துள்ளது. தீவிரமடைந்து வரும் அதிக வெப்பம் மனித உடல் ஆரோக்கியத்தில் பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஆகையால், பொதுமக்கள் இந்நாட்களில் அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.
விசேடமாக சிறுவர்கள்,முதியவர்கள், நாட்பட்ட நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கலாம். ஆகையால் அவர்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். மேலும் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதனால் நீரிழப்பு, உஷ்ணத்தாக்கம், பாரிசவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் வெயிலில் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
அதேபோல் வெளியில் தொழில்புரிபவர்கள் தகுந்த பாதுகாப்புடன் தமது பணிகளை முன்னெடுக்கலாம். தாகம் ஏற்படாதவிடினும் அடிக்கடி தண்ணீர் அருந்துவதன் மூலம் ஏற்படக்கூடிய நீரிழப்பைத் தவிர்த்துக்கொள்ள முடியும். குளிர்ச்சியான, நிழலான இடங்களில் இருங்கள். சிறுவர்களைத் தனியே வாகனங்களில் விட்டுவிட்டு வெளியேற வேண்டாம். பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் அவர்களை வைத்திருங்கள். மேலும் மயக்கம், களைப்பு, அதிக வியர்வை மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படின் குளிர்ச்சியான, நிழலான இடங்களில் ஓய்வெடுக்கலாம்.\\
இவ்வாறான அறிகுறிகள் நீடிக்குமாயின் உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடுங்கள். அத்தோடு இளநிறமான, தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. சிறுவர்கள் இக்காலங்களில் வெளியில் விளையாடுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்றார்.





