அனோஜன் விடுதலை - இரு வாரங்களில் நாடு திரும்புவார்
அவதூறானது எனக் கருதப்படும் பேஸ்புக் பதிவொன்று தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமையவே இத்தண்டனை வழங்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் மத அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 05 ஆண்டுகால சிறைதண்டனை இரத்துச் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இன்றும் ஓரிரு வாரங்களில் அவரை நாட்டுக்கு அழைத்து வருவோம். நாட்டு மக்கள் சார்பில் சவூதி அரசுக்கும், அந்நாட்டின் நீதித்துறைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், உயரிய கௌரவமளிக்கிறோம். அனோஜன் விவகாரம் வெளிநாடுகளில் வசிக்கும் சகல இலங்கையர்களுக்கும் சிறந்த படிப்பினையாகும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் காரியாலயத்தில் 11-11-2026 அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2026 செப்டம்பர் 17ம் திகதி கிழக்கு பிராந்திய சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. அவதூறானது எனக் கருதப்படும் பேஸ்புக் பதிவொன்று தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமையவே இத்தண்டனை வழங்கப்பட்டது.
இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 14ம் திகதி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் இரத்து செய்தது. இருப்பினும், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஏனைய தண்டனைகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக அவர் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ் வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வதில்லை என சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் 2026 நவம்பர் 09ம் திகதி தீர்மானித்துள்ளது.
அனோஜனின் விடுதலைக்காக ஆரம்பத்தில் இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நாடு என்ற அடிப்படையில் சவூதி அரசாங்கத்துக்கும், அந்நாட்டின் நீதித்துறைக்கும் உயரிய கௌரவத்தை அளிக்கிறோம்.இலங்கை மக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நாடு என்ற ரீதியில் வெற்றிப்பெற்றுள்ளோம்.இது தேசிய நல்லிணக்கத்துக்கும் இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் அனோஜனின் விவகாரம் ஒரு சிறந்த படிப்பினையாகும். வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் இலங்கையர்கள் அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் பாரம்பரிய முறைமைகளுக்கு அமைய கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என்று விடுத்த கோரிக்கைக்கு அமைய நாட்டு மக்கள் பொறுப்புடன் இந்த விடயத்தில் செயற்பட்டார்கள்.அனோஜன் விவகாரத்தில் இலங்கையர் என்ற அடிப்படையில் தான் அனைவரும் செயற்பட்டார்கள்.அதனால் தான் வெற்றிப் பெற முடிந்தது. இந்த இன நல்லிணக்கம் தொடர வேண்டும் என்றார்.





