தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டம்
இனஅழிப்பை கட்டமைக்கப்பட்ட முறையில் செய்கின்றது என்பதை மிகத்துலாம்பரமாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபில் வைக்கப்பட்டிருந்த திருவுருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக நேற்று மாலையில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தியாக தீபத்தின் திருவுருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக எடுத்துச்செயன்றமையானது, அராஜகமான செயல் என்று கண்டித்ததுடன், அநுர அரசாங்கம் இரட்டை வேடம் கலைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியதோடு அச்சிலை மீளவும் நிறுவப்படும் வரையில் தமது போராட்டம் பல்வேறு வடிவங்களில் தொடரும் என்றும் வலியுறுத்தினர்.
இந்தப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், பொ.ஐங்கரநேசன், நடராஜர் காண்டீபன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.
பங்கேற்றவர்கள், திலீபனுக்கு மாலைபோட்டு ஆட்சிக்கு வந்த ஜே.வி.பி. எம்.பிக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும், தியாக தீபத்தின் சிலை மீள நிறுவப்பட வேண்டும், பொலிஸாரின் அராஜகம் ஒழிய வேண்டும், நினைவேந்தல் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஜே.வி.பியின் இரட்டை முகம் அம்பலமானது திலீபனின் அகிம்சைப் போராட்டம் வாழ்க, வாழ்க என்று கோசங்களை எழுப்பினர்.
அத்துடன், சிறிலங்கா பொலிஸாரே அநுர அரசின் ஏவல்படையாக செயற்படாதே, தியாக தீபத்தின் திருவுருவச்சிலை சிங்கள பௌத்த அநுர அரசாங்கத்தினால் அகற்றப்பட்டமைக்கு கண்டனங்கள், திலீபனின் வாழ்க்கை எமது முதுகெலும்பு, தியாக திலீபனின் சிலையை ஏன் அகற்றினாய், மாலையிட்ட அநுர அரசு இன்று ஏன் சிலையை உடைத்தது, ஏங்களுடைய நினைவு எங்களுடைய உரிமை அதற்கான நாங்கள் உறுதியாக நிற்போம், போராடுவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கேசங்கள் அங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
நெகிழ்ச்சியான அஞ்சலி
போராட்டத்திற்கு முன்பாகவும், போராட்டத்தின் பின்பும் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் உள்ள திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட தூபியில் அதற்கான கண்டன பதாகை வைக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் மலர்களை வைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
குறிப்பாக, இளைஞர், யுவதிகள் முதல் பல்வேறு தரப்பினரும் கண்ணீர் மல்லக தங்களது அஞ்சலியை செலுத்தியதோடு தங்களுக்கு ஒரு சிலையைக்கூட வைத்து நினைவேந்த முடியாத அளவுக்கு அடக்குமுறை இன்னமும் நீளுகின்றது என்றும் தமது ஆதங்கங்களை அங்கிருந்த திலீபனின் புகைப்படங்களை நோக்கி வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்தின் முடிவில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், திலீபனின் சிலை நினைவாலயத்தில் நிறுவப்பட்டமையால் நாட்டின் நல்லிணகத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படவில்லை. பல சிங்கள மக்களே நினைவாலயத்திற்கு வருகை தந்து மலர் தூவி அஞ்சலித்திருந்தார்கள். திலீபன் தமிழ் மக்களின் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்ற தருணத்தில், சமாதானச் சீர்குலைவுகள் ஏற்படுகின்றபோது அவர் காந்திய வழியில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்.
அப்படியான ஒருவரின் நினைவேந்தல் நிறைவடைந்த மறுநாளே அவருடைய சிலை அகற்றப்பட்ட முறைமையானது இலங்கையில் பொலிஸ் பயங்கரவாதம், அரச பயங்கரவாதம் இன்னமும் நிலுவையில் இருக்கின்றது என்பதை வெளிப்படையாக காண்பித்துள்ளது. அநுர அரசாங்கமும் தமிழர்களை மாற்றதான் தாய் மனப்பான்மையுடன் தான் பார்கின்றது. இனஅழிப்பை கட்டமைக்கப்பட்ட முறையில் செய்கின்றது என்பதை மிகத்துலாம்பரமாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
தவத்திரு வேலன்சுவாமிகள் தெரிவிக்கையில், திலீபன் அண்ணா, தன்னினமான தமிழினத்துக்காக நீராகரம் அருந்தாது ஊனினை உருக்கி அடிப்படை உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பேராடிய மாமனிதர். அவருடைய நினைவேந்தல் சிலையை பொலிஸார் அகற்றியமையானது கண்டிக்கதக்கது. அதுமட.;டுமன்றி பொலிஸார் இவ்வாறு அராஜகமாகச் செயற்படுவார்களாக இருந்தால் இலங்கையில் நீதிமன்றங்களுக்கும், சட்டத்துக்கும் என்ன பெறுமானம் காணப்படுகின்றது என்ற கேள்வி எழுக்கின்றது. அதேநேரம் தியாக தீபம் திலீபனின் சிலை மீள நிறுவப்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது. அதற்காக நாங்கள் போராடுவோம் என்றார்.





