வெடுக்குநாறியை மையப்படுத்தி 51ஏக்கர் பகுதியை அளவீடு செய்வதற்கு முயற்சி
இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பு அனுராதபுரத்தின் ஆரம்ப காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையை மையப்படுத்திய 51ஏக்கர் வனப்பகுதியை தொல்பொருளில் திணைக்களத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிய வருவதாவது:
1921ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வவுனியா நைனாமடு வனம் வனப்பாதுகாப்பு திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள ஒலுமடு கிராமசேவையாளர் பிரிவின் வெடுக்குநாறிமலை சிவன் ஆலயம் உள்ளடங்கலாக 51 ஏக்கர் காணியை தொல்பொருளியல் திணைக்களம் தமது ஆய்வுகளுக்கான விடுவிக்கக்கோரி நெடுங்கேணி பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
குறித்த கடிதத்தை அடுத்து, நெடுங்கேணி பிரதேச செயலாளர் வனவளத்திணைக்களத்திடமிருந்து மீளப்பெற்று தொல்பொருளியல் திணைக்களத்துக்கு வழங்குவதற்காக அப்பகுதியை அளவீடு செய்து தருமாறு நில அளவையாளர் திணைக்களத்திற்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நில அளவையாளர் திணைக்களம், குறித்த பகுதியை அளவீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஒலுமடு 222 பீ கிராம அலுவலர் பிரிவில், வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நைனாமடு வனப் பகுதியில் அமைந்துள்ள வடுன்னாகல தொல்லியல் இடம் தற்போது தமது நிறுவனத்தினால் ஆய்வு செய்யப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அந்த இடத்தை தொல்லியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, 2026 செப்டெம்பர் 21ஆம் திகதி குருந்தி ரஜமகா விகாரையின் விகாராதிபதி தேரருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றின் மூலம், பதில் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ. செனரத் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் பழைய பௌத்த விகாரையொன்றுடன் தொடர்புடைய தொல்லியல் சான்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதன்படி இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பு அனுராதபுரத்தின் ஆரம்ப காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய தூபி, பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று குகை கல்வெட்டுகள், கடாரங்கள் செதுக்கப்பட்ட எட்டு குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள் உள்ளிட்ட பழைய பௌத்த விகாரையொன்றுடன் தொடர்புடைய தொல்லியல் சான்றுகள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பு அனுராதபுரத்தின் ஆரம்ப காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, இந்த தொல்லியல் இடத்தை எதிர்காலத்திற்காக பாதுகாப்பது எமது நிறுவனத்தினதும், தாங்கள் உள்ளிட்ட அனைவரினதும் பொறுப்பு எனக் கருதுகிறேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம், இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வன்னி வாழ் சைவ தமிழ் பக்தர்களால் வழிபடப்பட்டு வரும் மலைக் கோயில் பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





