கேரளத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 28 வயது இளைஞர் கைது
அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 28 வயதான குருமூர்த்தி என்பவரை கேரள காவல்துறையினர் பாலக்காட்டில் கைது செய்துள்ளனர்.
அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலி மூலம் அந்தக் கும்பலின் முக்கியத் தொடர்பாளர் ஒருவருடன் அவர் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட குருமூர்த்திக்கு, தமிழ்நாட்டுடனும் குடும்ப பூர்வீகத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பல ஆண்டுகளாகக் கேரளத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் அந்த குற்ற கும்பலின் உதவியாளராக செயல்பட்டிருக்கலாம் எனப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. எனினும், அந்தக் கும்பலில் அவருக்கு இருந்த பங்கு மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குப் பயங்கரவாதத் தடுப்புப் படையினரும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளும் உதவி வருகின்றன.





