இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கப்படும்
இந்த வழக்கின் சாட்சியாளரான நிமல் பெரேராவுக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அவர் அவூஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
கிரிஷ் இலஞ்ச கொடுக்கல் வாங்கல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இடைநிறுத்துவதற்கான இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த உத்தரவு எதிர்வரும் 18ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் 13-11-2026அன்று உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்து, இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த சீராய்வு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் அதன் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார மன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஜா பண்டார, “கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை கடந்த 3ஆம் திகதி பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டார்.
அந்தப் பிணை உத்தரவு சட்டத்துக்கமைய குறைபாடுகளைக் கொண்ட உத்தரவாகும். ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 (1) பிரிவின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலும் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும். அத்தோடு விசேட சூழ்நிலைசார் காரணங்கள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பங்களில் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க முடியும்.
ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த விதிவிலக்கின் அடிப்படையில் குறித்த சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு நீதிவான் பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு முரணானதாகும்.
சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர், சாட்சியமளிக்க அஞ்சிய இரு சாட்சியாளர்கள் எவ்வித அச்சமும்மின்றி இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி உண்மைகளை வெளிப்படுத்தி சாட்சியமளித்தனர்.
இந்த வழக்கின் சாட்சியாளரான நிமல் பெரேராவுக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அவர் அவூஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்படுவதன் மூலம் சாட்சியாளர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படலாம். ஆகையால் சந்தேகநபரான பிரதிவாதிக்குப் பிணை வழங்கி கொழும்பு நீதிவான் கடந்த நவம்பர் 3ஆம் திகதி பிறப்பித்த பிணை உத்தரவை இடைநிறுத்தும் வகையிலான இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்”
இதன்போது நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி , இவ்வாறான கோரிக்கையொன்றை இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு திடீரென முன்வைப்பது தொடர்பில் கடுமையான சந்தேகம் எழுகிறது.
ஏனெனில் எனது சேவை பெறுநர் தற்போது வரை விளக்கமறியலில்தான் உள்ளார். இந்த மனுவின் ஊடாக ஆணைக்குழு கோரும் இடைக்கால நிவாரணமும் இறுதி உத்தரவு ஆகியன இரண்டும் ஒன்றாக உள்ளது.
மனு மீதான விசாரணை நிறைவடைந்த பின்னர் கோரப்படும் இறுதித் தீர்ப்பொன்றை இடைக்காலத் தடை உத்தரவாகக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் தாயாருக்கு இருந்த இதய நோய் நிலைமையை ஒரு விசேட காரணியாக நீதிவான் இனங்கண்டதில் என்ன பிழை உள்ளது?
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள இந்தக் கோரிக்கையில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை. ஆகையால் ஆணைக்குழு கோரும் இந்த இடைக்காலத் தடை உத்தரவை நிராகரிக்குமாறு கோருகிறேன் என்றார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம் நவம்பர் 18ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.





