யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை 26ஆம் திகதி
இச்சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களை நிறைவு செய்யத் தாம் எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
சுமார் 730 இலட்சம் ரூபா பெறுமதியான காணி துண்டுகளை மோசடியான முறையில் கையகப்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டி, பணச் சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வழக்கு 12-11-2026 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணத்துங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு மேலதிக சாட்சி விசாரணைக்காக அழைக்கப்பட்ட போதிலும், இதன்போது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், எனது சேவைபெறுநர் முதுகுப் பகுதி சார்ந்த நோய் நிலைமையால் அவதிப்பட்டுவருவதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு அது தொடர்பான மருத்துவ அறிக்கையொன்றையும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களை நிறைவு செய்யத் தாம் எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார். முறைப்பாட்டாளர் தரப்பில் இன்னும் மூன்று சாட்சிகள் மாத்திரமே சாட்சியமளிக்க அழைக்க வேண்டியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த அவர், எதிர்வரும் வழக்கு விசாரணையில் குறித்த மூன்று சாட்சிகளையும் அழைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, எதிர்வரும் 26 ஆம் திகதி வழக்கை அழைப்பதுக்கு உத்தரவிட்டிருந்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
730 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு தெஹிவளை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 5 காணித் துண்டுகளைக் கொள்வனவு செய்ததன் ஊடாகப் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபரினால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





