பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாத வெற்று அறிக்கை - ஐக்கிய தேசியக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் 6 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு, கடந்த இரண்டு வருடங்களில் ஒரு பில்லியன் டொலரால் மாத்திரமே வளர்ச்சியடைந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2027 ஆம் ஆண்டிற்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவுத் திட்டம், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாகவும், மக்களுக்குப் பதில்களை விடப் பல கேள்விகளையே எஞ்ச வைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி விசனம் வெளியிட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டளவில் அரசாங்கம் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள போதிலும், அதனை எவ்வாறு செலுத்துவது அல்லது அதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து இந்த வரவு, செலவுத் திட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான தினுக் கொலம்பகே மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில், 2028 ஆம் ஆண்டளவில் அரசாங்கம் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ள போதிலும், அதனை எவ்வாறு செலுத்துவது அல்லது அதற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து இந்த வரவு, செலவுத் திட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், உலக வரலாற்றில் இவ்வாறானதொரு விடயத்திற்குக் குழுவொன்றை நியமித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகவே வரலாற்றில் பதியப்படும்.
அத்துடன், வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 5.2 பில்லியன் டொலரிலிருந்து 7.9 பில்லியன் டொலராக 53 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்து டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 337 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் 6 பில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு, கடந்த இரண்டு வருடங்களில் ஒரு பில்லியன் டொலரால் மாத்திரமே வளர்ச்சியடைந்துள்ளது.
வருமான இலக்குகளை எட்டிவிட்டதாக கூறும் அரசாங்கம், எதற்காக 3.8 டிரில்லியன் ரூபா கடனைப் பெறத் திட்டமிட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கம் நிதி ரீதியாக வங்குரோத்தடையாவிட்டாலும், கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையில் வங்குரோத்தடைந்துள்ளது என்றார்.





