மனித – யானை மோதல்களை தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் பரிசோதனை
இக்கள ஆய்வின் போது இலங்கையின் புவியியல் அமைப்பு காட்டு யானைகளின் நடமாட்டப் போக்கு அவை கிராமங்களுக்குள் நுழையும் வழித்தடங்கள் மற்றும் கெமரா அமைப்புக்களை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்கள் குறித்த விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் நிலவும் மனித – யானை மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்துடன் கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆரம்பக் கட்ட கலந்துரையாடலும் கள ஆய்வும் கல்கமுவவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் மற்றும் சீனாவின் பிரபல தொழிநுட்ப நிறுவனமான ஹு வாவி நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது சீனாவில் மனித யானை மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவ்வாறான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புக்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையை சீனத் தூதுவரும் ஹு வாவி பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டினர்.
முன்மொழியப்பட்டுள்ள இப்புதிய தொழிநுட்பமானது காட்டு யானைகளின் உடல் அளவு மற்றும் அவற்றின் நடமாட்ட முறைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை அடையாளம் காணக்கூடிய செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு கமரா அமைப்புக்களை பயன்படுத்துகிறது.
இதன்மூலம் காட்டு யானைகள் கிராமங்களுக்கு நுழைவதற்கு முன்னதாகவே அவற்றைக் கண்டறிந்து அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாகத் தகவல்களை வழங்க முடியும்.
இக்கள ஆய்வின் போது இலங்கையின் புவியியல் அமைப்பு காட்டு யானைகளின் நடமாட்டப் போக்கு அவை கிராமங்களுக்குள் நுழையும் வழித்தடங்கள் மற்றும் கெமரா அமைப்புக்களை நிறுவுவதற்குப் பொருத்தமான இடங்கள் குறித்த விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களையும் நவீன தொழிநுட்பத் தீர்வுகளையும் இலங்கையின் சுற்றுச் சூழல் மற்றும் புவியியல் நிலைமைகளுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மதிப்பிடுவதே இக்கள ஆய்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.





