உலகையே முடக்கிய தொழில்நுட்பக் கோளாறு: மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன
சேவையகக் (சர்வர்) கோளாறுகளே இந்தப் பாதிப்புக்கு காரணம் என்று நிறுவனம் முன்னதாக விளக்கியிருந்தது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சேவை முடக்கத்துக்குப் பிறகு, தனது சேவைகள் அனைத்தும் முழுமையாகச் சீரடைந்துவிட்டதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. டீம்ஸ், அவுட்லுக் உள்ளிட்ட சேவைகள் முடங்கியதால், நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளின் இணையவழித் தகவல் தொடர்பு 24 மணி நேரத்துக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டது.
"இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அடிப்படைப் பிரச்சினையைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளோம். இதனால் பாதிக்கப்பட்டிருந்த எஞ்சிய வாடிக்கையாளர்கள் மற்றும் பகுதிகளுக்கும் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன" என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சேவையகக் (சர்வர்) கோளாறுகளே இந்தப் பாதிப்புக்கு காரணம் என்று நிறுவனம் முன்னதாக விளக்கியிருந்தது. இதன் தாக்கம், மைக்ரோசாஃப்டின் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான கோபைலட்டையும் பாதித்தது. இருப்பினும், இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் தீங்கிழைக்கும் செயல்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தங்களுக்குத் தகவல் இல்லை என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்தப் பாதிப்புக்குக் காரணமல்ல என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.





