பளை பகுதியில் பயிற்சி முகாம்; சங்கீத் ஜெயசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
விசாரணைகளின் போது சந்தேகநபர் 03 தேசிய அடையாள அட்டைகளைத் தன்வசம் வைத்துள்ளமையுடன், மேலும் பல போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளமையும் வெளிவந்துள்ளது.
கிளிநொச்சி - பளை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான பயிற்சி முகாமொன்றும் வெடிபொருள் உற்பத்தி நிலையமொன்றும் காணப்படுவதாகப் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, சங்கீத் ஜெயசேகர என்பவரை எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசந்த அமரசேன 30-09-2026 அன்று உத்தரவிட்டார்.
பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து தெரிவிக்கையில், சந்தேகநபர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி முற்றாக உண்மைக்குப் புறம்பான இந்த கூற்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது சந்தேகநபர் 03 தேசிய அடையாள அட்டைகளைத் தன்வசம் வைத்துள்ளமையுடன், மேலும் பல போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளமையும் வெளிவந்துள்ளது. கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவரே தமக்கு இத்தகவலை வழங்கியதாகச் சந்தேகநபர் கூறிய போதிலும், குறித்த உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறப்பட்ட போது அவ்வாறான எந்தவொரு தகவலையும் தாம் வழங்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புப் பதிவுகளை விரிவாகப் பரிசீலிப்பதற்கும், போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் உள்ளதாகப் பொலிஸார் அளித்த வாக்குமூலங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.





