ரணில், சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிரான வழக்கு - நவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தின் 166 இலட்சம் ரூபா நிதியைத் தவறாகப் பயன்படுத்தி இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, சட்டமா அதிபரின் மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வழக்கு 30-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது பிரதிவாதிகளான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
விசாரணைகளின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், “குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், அதற்குரிய ஆவணக் கோவைகள் சட்டமா அதிபரின் பரிசீலனை மற்றும் ஆலோசனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக” அறிவித்திருந்தார்.
“அதற்கமைய, இவ்வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக பொருத்தமான திகதியொன்றை வழங்குமாறும் ” சிரேஷ்ட அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்ச்சியங்களை பரிசீலித்த கோட்டை நீதிவான், இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபரின் நிலைப்பாடு மற்றும் ஆலோசனைகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு அரச சட்டத்தரணிக்குக் உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தமது பதவிக் காலத்தில், அரசாங்கத்துக்குச் சொந்தமான 166 இலட்சம் ரூபா நிதியை சட்டவிரோதமான முறையில் தவறாகப் பயன்படுத்தி இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





