வாகன இறக்குமதிக்கு 50சதவீத மேலதிக வரி - விசேட வர்த்தமானி வெளியீடு
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள 2026.05.15 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை மோட்டார் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் (Customs Import Duty) மீது தற்காலிகமாக 50 சதவீத மேலதிகக் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள 2026.05.15 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, இப்புதிய வரி விதிப்பு முறை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த மூன்று மாத காலத்திற்கு இது அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10 ஏ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 50 சதவீத மேலதிகக் கட்டணமானது பொதுவான மற்றும் முன்னுரிமை இறக்குமதி வரி அடிப்படைகள் இரண்டிற்குமே பொருந்துமென நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்லக்கூடிய பொதுப் போக்குவரத்து வாகனங்கள், மோட்டார் கார்கள், ஸ்டேஷன் வேகன்கள், பந்தய கார்கள், ஆம்புலன்ஸ்கள், சிறைச்சாலை வண்டிகள், பிரேத வாகனங்கள், நடமாடும் வீடுகள் மற்றும் கோல்ப் கார்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான வாகனங்களுக்கு இந்த மேலதிகக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.
இந்த ஒழுங்குமுறையானது சிலிண்டர் திறன், எஞ்சின் உந்துவிசை வகை மற்றும் வாகனத்தின் பழமை ஆகியவற்றின் அடிப்படையிலான தொழில்நுட்ப வகைப்பாடுகளின் கீழ் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய வரி விதிப்பினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் சலுகையொன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 2026 மே 15 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ திறக்கப்பட்ட கடன் கடிதங்களுக்கு (Letters of Credit - L/C) இந்த புதிய 50 சதவீத மேலதிக வரி கட்டணம் பொருந்தாதென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





