வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.செயலாளர் நாயகம் சாந்திப்பு
முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்தார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி, மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸுக்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் விளக்கமளித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் உயர்மட்டப் பிரதிநிதிகளின் அமர்வில் கடந்த 30-09-2026 அன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனைத்தொடர்ந்து உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடத்தியுள்ளார்.
அச்சந்திப்புக்களின் ஓரங்கமாகவே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாற்றமாக அமைந்த இச்சந்திப்பின்போது, அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கையின் பொருளாதார மீட்சி, மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்தார்.
அதேபோன்று அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக்கொண்ட சர்வதேச நிதிக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையணியில் இலங்கையின் பங்களிப்புப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அணுவாயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜித்த ஹேரத், அணுவாயுதக் குறைப்பு தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தினார்.
அதுமாத்திரமன்றி அணுவாயுதங்களை முழுமையாக ஒழிப்பதை இலக்காகக்கொண்ட காலவரையறைக்கு உட்பட்ட வலுவான நடவடிக்கைகளை சகல நாடுகளும் முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
மேலும் மிகையான வளங்களை அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி மற்றும் காலநிலை சவால்களைக் கையாள்வதற்கான நடவடிக்கைகள் என்பவற்றுக்காகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் விஜித்த ஹேரத் வலியுறுத்தினார்.





