நாட்டைகட்டியெழுப்பும் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது - அமைச்சர் சரோஜா சாவித்திரி
இலங்கையைப் பொறுத்தவரை ஆளுமை மிக்க தலைவர்களே தேவைப்படுகின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் கொண்ட கொள்கையில் தளராதவர்களாகவும் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் காத்திரமான பயணத்தை எவராலும் எத்தகைய சூழ்ச்சிகளாலும் தடுத்து நிறுத்த முடியாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 14-11-2026 அன்று இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழில் ஒரு பழமொழி உண்டு.அது “தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுவது” அவ்வாறு தான் சபையில் சிலரது செயற்பாடுகளை பார்க்க முடிகிறது.
அரசியல் மாற்றம் மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நல்லவர்களைப் போல நடித்து மறுபுறம் இந்த அரசாங்கத்தை வீழ்ச்சியுறச்செய்வதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள்.
வங்குரோத்து நிலையிலுள்ள எதிர்க்கட்சியானது தோல்வி கண்ட அரசியல் மற்றும் இனவாதத்துக்கு ஊடாக ஏதாவது சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளப் பார்க்கின்றது. அதற்காக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை ஆளுமை மிக்க தலைவர்களே தேவைப்படுகின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் கொண்ட கொள்கையில் தளராதவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் எந்த வித கொள்கையும் இன்றி சந்தர்ப்பவாத அரசியலுக்கு அடிமைப்பட்டு கட்சி மாறாட்டத்துடன் செயல்படுவர்களே எதிர்க்கட்சியில் உள்ளனர். அவர்களின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்றார்.





