இலங்கை -ஜப்பான் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் ஜப்பானிய நிறுவனங்களுக்கான வணிகச் சூழல் குறித்து ஜெட்ரோ (JETRO) நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், Itochu மற்றும் Mitsui போன்ற முன்னணி ஜப்பானிய நிறுவனங்கள் தமது வணிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன.
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், "இலங்கை - ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்" 17-02-2026 அன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலெந்திரராஜா மற்றும் வெளிவிவகார அமைச்சின் பதில் மேலதிக செயலாளர் (இருதரப்பு பொருளாதார விவகாரங்கள்) தர்ஷன எம். பெரேரா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் மட்சுவோ தகேஹிகோ மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் முரோதானி மசகட்சு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த கொள்கை உரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வரைபடம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், ஒரு கைத்தொழில்துறை வழி தடத்தை உருவாக்குவதற்கான வரைபடம் மற்றும் இலங்கையின் ஏற்றுமதித் திறன் குறித்த ஆய்வு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கையில் ஜப்பானிய நிறுவனங்களுக்கான வணிகச் சூழல் குறித்து ஜெட்ரோ (JETRO) நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், Itochu மற்றும் Mitsui போன்ற முன்னணி ஜப்பானிய நிறுவனங்கள் தமது வணிக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கொள்கை உரையாடல் மூலம் இலங்கை மற்றும் ஜப்பான் இடையே நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் என இரு நாட்டுப் பிரதிநிதிகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.





