சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம் - பிரதமர் கலாநிதி ஹரிணி
முன்பள்ளிப் பருவத்தில் எழுத்துக்களையும் எண்களையும் பலவந்தமாக எழுத வைப்பதை விட, விளையாட்டு மூலம் சமூக திறன்களையும் ஆளுமை வளர்ச்சியையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.
சிறுவர் பருவம் எதிர்கொள்ளும் நவீன சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில், குழந்தைகளின் உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பு, மனநலன் மற்றும் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது.அரசாங்கம் அதற்கு முன்னுரிமை அளித்துள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஏற்பாடு செய்த சிறுவர் தின தேசிய விழா நிகழ்வு 02-10-2026 அன்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 'டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் கல்விக்குக் கிடைக்கும் நன்மைகளைப் போல, இணையவழி துன்புறுத்தல்கள் மற்றும் தவறான வழிநடத்தும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அழுத்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, குழந்தைகளுக்கு எதிரான உடல்ரீதியான தண்டனைகள் மற்றும் மனரீதியான வாதைகளைத் தடுப்பதற்கும், குழந்தையின் கண்ணியத்தை பாதுகாக்கும் ஒழுக்கமான முறைகளை ஊக்குவிப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
பொருளாதாரச் சுரண்டலில் இருந்து குழந்தைகளை மீட்பதற்காக நிறைவேற்றப்பட்ட 'மகளிர்இ இளைஞர் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டம்' மூலம் ஆபத்தான பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை 10,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாய் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி,முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்தி ஒரே தேசிய தரத்திற்கு உட்படுத்துதல், முன்பள்ளிப் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய தொழிற்தகைமை மற்றும் பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளிப் பருவத்தில் எழுத்துக்களையும் எண்களையும் பலவந்தமாக எழுத வைப்பதை விட, விளையாட்டு மூலம் சமூக திறன்களையும் ஆளுமை வளர்ச்சியையும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. மொழி,மதம் அல்லது பிரதேச வேறுபாடின்றி ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும், இதை அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது என்பதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முழுச் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.





