ஞானசார தேரரை கைது செய்ய பகிரங்க பிடியாணை
அவர் சுகவீனமுற்றுள்ளதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஞானசார தேரருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், பொலிஸ் மாஅதிபர் ஊடாக பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாயாதுன்னே கொரயா மற்றும் நீதிபதி லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா விடயங்களை முன்வைக்கையில், “பிரதிவாதியான ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் புலனாய்வுச் சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிக்கையொன்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் திகதி ஞானசார தேரர் கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்ததாகத் தகவல் கிடைத்தபோதிலும், அதன் பின்னர் அவரைப் பற்றிய எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து, ஞானசார தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட , எனது சேவைபெறுநர் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் கிடைத்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் அவரிடமிருந்து தமக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் கிடைக்கவில்ல. எனினும், அவர் சுகவீனமுற்றுள்ளதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர விடயங்களை முன்வைக்கையில், “இந்த வழக்கு விசரணையில் எனது சேவைப்பெறுனரும் முன்னிலையாக விடயங்களை முன்வைப்பதற்குத் அனுமதி அளிக்குமாறு” நீதிமன்றத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
எனினும், இது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு என்பதால், இத்தருணத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடுகள் குறித்து பரிசீலிக்க நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
“ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட்ட ஞானசார தேரருக்கு எதிரான சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அன்றைய தினம் அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஞானசார தேரர் சுகவீனமுற்று ஓய்வெடுத்து வருவதாகத் தெரிவித்து கால அவகாசம் கோரியபோதிலும், இதுவொரு குற்றவியல் வழக்கு என்பதால் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் பிடியாணை பிறப்பிக்குமாறு” அரச சட்டத்தரணி சஜித் பண்டார மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அதற்கமைய நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு பகிரங்க பிடியாணையும் பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டது. இதேவேளை ஞானசார தேரரை ஒக்டோபர் 1 ஆம் திகதி (நேற்று ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த 29 ஆம் திகதி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





