ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள் -அரசாங்கத்துக்கு மு.கா.ரவூப் ஹக்கீம்
எமது கடற்படையை அமெரிக்காவுக்கு உளவு பார்ப்பதற்கு தற்போது பயன்படுத்துகிறார்கள்.
அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்தி, நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ட்ரம்ப் தோல்வியடைய, ஈரான் யுத்தம் மாத்திரம் காரணமில்லை. அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் காரணமாகும். அதேநேரம் அரசாங்கம் கார்த்திகை தினத்தில் தமது அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர இருக்கும் உரிமை, தமிழ் மக்களுக்கும் உயிர்நீர்த்த தம்மவர்களை நினைவு கூருவதற்கும் இருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 14-11-2026 அன்று இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு, செலவு திட்ட உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கு மீண்டும் செல்ல வேண்டுமா இல்லையா என ஆராய்ந்து பார்க்க குழு அமைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் மீண்டும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென நிதி பிரதி அமைச்சர் தெரிவித்திருப்பதாக வீரகேசரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது . தமது கார்த்திகை வீரர் தினத்தை கொண்டாடிவிட்டு தற்போது நாணய நிதிய வேலைத்திட்டத்துக்கு செல்வது தொடர்பி்ல் கதைக்கிறார்கள். இதுதான் இந்த அரசாங்கத்தின் நிலை .
இந்த அரசாங்கம் தமது அமைப்பில் இருந்து உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை வீரர் தினத்தை அனுசரித்தனர் அதில் பிரச்சினை இல்லை. ஆனால் தமிழ் மக்கள் உயிர்நீர்த்த தம்மவர்களை நினைவு கூருவதற்கு சமத்துவமான உரிமை வழங்குவதில்லை. அவர்களின் சிலைகளை உடைக்கின்றீர்கள், புதைகுழிகளை தோண்டி அப்புறப்படுத்துகின்றீர்கள்.
மரணித்த உங்களின் வீரர்களுக்கு உறவினர்களுக்கு கெளரவிப்பது உங்களின் கொள்கை என்றால், அரசாங்கமான உங்களுக்கு இருக்கும் உரிமையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கமாக நீங்கள் சொல்வது ஒன்று செய்வது வேறு ஒன்று.
அத்துடன் அரசாங்கம் மக்கள் மீது வரிகளை சுமத்தி, நெருக்கடிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தால், அமெரிக்க ஜனாதிபதி டரம்புக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம் தோல்வியடைய, ஈரான் யுத்தம் மாத்திரம் காரணமில்லை. அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் காரணம். ஜனாபதி பதவி இருக்கும் அனைத்து நாடுகளிலும் இந்த நிலையே ஏற்படுகிறது.
ஜனாதிபதிகள் நினைத்து, நினைத்து தீர்மானங்களை எடுப்பதன் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனால் அரசாங்கம் முடிந்தால், மாகாணசபை தேர்தலை நடத்திக்காட்டட்டு்ம். மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை. மாகாணசபை தேர்தலை நடத்துவீர்களா இல்லையா என்பதை முடியுமானால் தெரிவியுங்கள் .
அரசாங்கம் இடைக்கால குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவந்து இஸ்ரேலில் இருந்து விமானம் ஒன்றை அவசர கொள்வனவு செய்வதற்கு 4 பில்லியன் ரூபாவுக்கு அனுமதியை பெற்றுத்தருமாறு அரசாங்க நிதிகக்குழுவுக்கு தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேலிடம் இதனை கொள்வனவு செய்வது, ஈரானுக்கு எதிராக உளவு பார்ப்பதற்காகும். ஈரானின் கப்பல்கள் எவ்வாறு இங்கு செயற்படுகின்றன என பார்த்து, அதுதொடர்பில் அமெரிக்காவுக்கு உளவுத்தகவல்களை வழங்குவதற்காகும்.
எமது கடற்படையை அமெரிக்காவுக்கு உளவு பார்ப்பதற்கு தற்போது பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை மேற்கொண்டு, மண் கவ்விக்கொள்ள வேண்டாம். நீங்கள் அமெரிக்காவுக்கு பயந்து தீர்மானம் எடுப்பதற்கு அஞ்சிக்கொண்டிருந்தமையாலே நூற்றுக் கணக்கான ஈரான் இளம் கடற்படை வீரர்கள் உயிரிழக்க நேரிட்டது.
அதேநேரம் பலஸ்தீனில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அது தொடர்பில் அறிக்கை ஒன்றையாவது விடுக்க வேண்டும் என்றார்.





