யோஷித்த தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி பேராசிரியர் சுமுது பிரேமசந்திரவின் இணக்கத்துடன் நீதிபதி அமல் ரணராஜா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
கறுப்புபணச் சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் 'சதி' எனும் குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் 03-07-2026அன்று தள்ளுபடி செய்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி பேராசிரியர் சுமுது பிரேமசந்திரவின் இணக்கத்துடன் நீதிபதி அமல் ரனராஜா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். குறித்த சதி குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல எந்தத் தடையும் இல்லையென அவர் இதன்போது அறிவித்தார்.
திறந்த மன்றில் இதுதொடர்பிலான உத்தரவை நீதிபதி அமல் ரணராஜா அறிவித்தார். 'மேல்நீதிமன்ற வழக்கு விசாரணையில் முதலில் 2 பிரதிவாதிகளுக்கு எதிராக சதி எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதில் ஒரு பிரதிவாதி விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த மனுதாரருக்கு எதிராக மட்டும் சதி எனும் குற்றச்சாட்டை முன்னெடுத்துச்செல்ல முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
சதி எனும் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத ஒருதரப்புடன் கூட இணைந்து முன்னெடுத்ததாக பிரதிவாதி ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்க முடியும்.அதற்கான நீதிமன்றம் முன்னிலையில் இரண்டு பிரதிவாதிகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒரு பிரதிவாதிக்கு எதிராக மட்டும் சதி எனும் குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என முன்வைக்கப்பட்டுள்ள வாதத்தை ஏற்க முடியாது.அதனால் மனுதாரருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டு சட்டபூர்வமானது.
அதனை முன்னெடுத்துச் செல்ல மேல்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது' என மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதி அமல் ரனராஜா தனது தீர்ப்பை அறிவித்தார்.
அதன்படி யோஷித்த ராஜபக்ஷ முன்வைத்த சீராய்வு மனுவை தள்ளுப்படி செய்வதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கொழும்பு மேல் நீதிமன்றில் யோஷித்த ராஜபக்ஷவுக்கும் டேசி பொரஸ்ட் எனும் அவரது பாட்டிக்கு எதிராக சட்டமா அதிபர் கறுப்பு பணச்சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தார்.இதில் வழக்கு ஒன்றை எதிர்கொள்ளும் மனநிலையில் வயோதிபரான டேசி பொரஸ்ட் இல்லையென்பது வைத்திய சான்றிதழ் ஊடாக உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் டேசி பொரஸ்ட் விடுவிக்கப்பட்ட பின்னர் தனக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரத்தில் உள்ள சதி எனும் குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என யோஷித்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார்.எனினும் அதனை மேல்நீதிமன்றம் நிராகரித்தது. மேல் நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு எதிராகவே யோஷித்த ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் சீராய்வு மனுவை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்தது.





