இலகு ரயில் திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்
பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைகா) இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-02-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய திட்டங்களின் வெற்றிகரமான அமலாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்குப் பின்னரே எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜைகா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எல்.ஆர்.டி. திட்டத்தை செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜைகாவிடமிருந்து இன்னும் இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு அமையும் என்று ஜைகா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.
நாம் ஜப்பானில் ஜைகா அதிகாரிகளை சந்தித்தபோது அனைத்து முன்மொழிவுகளையும் முன்வைத்தோம். எவ்வாறிருப்பினும் ஆரம்ப கட்டமாக தற்போதுள்ள திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றார்.
இதேவேளை ஜைக்காவின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சை அலகுகளை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் ஆகிய பணிகளை மீண்டும் தொடங்குதல் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய 5 பிரதான வைத்தியசாலைகளில் இதய சிகிச்சை அலகுகளை அமைப்பதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் ஜைக்கா 2018ஆம் ஆண்டில் 7,903 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியது.
இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதாலும், ஜப்பானிய அரசாங்கத்துடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாலும், இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஜைக்கா உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பணிகளை பூர்த்தி செய்வதற்காக திட்ட காலப்பகுதியை 2029 டிசம்பர் 31 வரை நீடிப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணக் கொள்வனவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





