அமெரிக்க, ஈரான் தூதரகங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம்
இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று அப்பால் ஈரானியக் கொடியை ஏந்திய 19 கப்பல்கள் வந்து நங்கூரமிட்டுள்ளன.
இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று அப்பால் ஈரானியக் கொடியை ஏந்திய 19 கப்பல்கள் வந்து நங்கூரமிட்டுள்ளன. இது இராஜாதந்திர ரீதியில் எமது நாட்டுக்கு பெரும் நெருக்கடிகளை தோற்றுவிக்கக் கூடிய நிலைமையாகும். எனவே எமது அரசாங்கமானது காலந்தாழ்த்தாமல் உடனடியாக அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதரகங்களின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்த நடத்தி, இந்தச் சிக்கலுக்கு விரைந்து ஒரு சரியான தீர்வைக் காண வேண்டுமென இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் இப்னம் கபூர் வலியுறுத்தினார்.
கொழும்பில் 03-10-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கடல் எல்லைக்கு சற்று அப்பால் ஈரானியக் கொடியை ஏந்திய 19 கப்பல்கள் வந்து நங்கூரமிட்டுள்ளன. இதனால் தற்போது ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச மனிதநேய விதிகளின்படி அக் கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய சட்டப் பொறுப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம் அமெரிக்காவுடனான பொருளாதாரத் தொடர்புகளுக்குப் பயந்து அந்தப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை இலங்கை அரசாங்கம் இந்த ஈரானியக் கப்பல்களுக்கு உதவிகளை வழங்கினால், அமெரிக்கா இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு முதல் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதால் எமக்குக் கூடுதல் டொலர் கையிருப்பு தேவையாக உள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால், நாட்டின் ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, எமது அரசாங்கமானது காலந்தாழ்த்தாமல் உடனடியாக அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதரகங்களின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்த நடத்தி, இந்தச் சிக்கலுக்கு விரைந்து ஒரு சரியான தீர்வைக் காண வேண்டும்.
இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த 19 கப்பல்களிலும் கப்பலுக்கு 25 முதல் 30 ஊழியர்கள் வீதம் நூற்றுக்கணக்கான கப்பல் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்தோ அல்லது மனிதநேயப் பிரச்சினைகளோ ஏற்படும் போது இலங்கை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பொறுத்தமான செயலாக இருக்காது.
அதேபோல, வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தவரை, முன்னர் ஈரானியக் கொடியுடன் ஐ.ஆர்.ஐ.எஸ்.எல். எனப்படும் கப்பல் நிறுவனத்தின் கப்பல்கள் இலங்கைக்கு நேரடியாக வந்து சென்றன. ஆனால் தற்போது அந்த வழித்தடம் மாற்றப்பட்டு, அக்கப்பல்கள் நேரடியாக இந்தியாவுக்குச் செல்கின்றன.
இதனால் இலங்கையின் இறக்குமதிகளான உரம், தார் போன்ற பொருட்களுக்கும், ஏற்றுமதிகளான தேயிலை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கு எமது ஏற்றுமதிகளில் பெரும் பங்கு உள்ளது. தற்போது பொருட்கள் இந்தியா வழியாகச் சுற்றி வருவதால் கப்பல் கட்டணங்கள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன.
இதற்கு முன்னர் 50 அல்லது 60 டொலருக்குக் கிடைத்த கொள்கலன்கள் தற்போது 100 டொலராக அதிகரித்துள்ளதால், நாட்டின் டொலர் கையிருப்பு மேலும் வெளிச் செல்லக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
வணிகக் கப்பல்கள் இந்தியாவுக்குச் சென்றுவிடும் போது, இலங்கையின் துறைமுகங்களுக்குக் கிடைக்க வேண்டிய கப்பல் கட்டண வருமானம் இழக்கப்படுகின்றது. இந்தியாவுக்கு இத்தகைய கப்பல்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்றால், இலங்கையால் ஏன் அதனைச் செய்ய முடியாது?
எனவே அரசாங்கம் விரைந்து செயற்பட்டு அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுடனும் சுமுகமான முறையில் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரு நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் ஒரு தகுந்த தீர்வைக் காண வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கையாகும் என்றார்.





