அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்
அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
சவுதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-11-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனோஜன் விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். குறிப்பாக வெளிவிவகார அமைச்சு இப்போது வரை அந்த விடயத்தில் ஈடுபாட்டுடனேயே செயற்பட்டு வருகிறது. அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான தினம் குறித்து ஸ்திரமாகக் கூற முடியாது. ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் என்ற ரீதியில் வெளிவிவகார அமைச்சும், தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசாங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.





