ஆனந்த பாலித்தவுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்
தொழிற்சங்கத் தலைவரான எமது சேவைபெறுநரின் பேச்சு சுதந்திரத்தில் தடையேற்படுத்துவதுக்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டினர்.
2015 - 2018 காலப்பகுதியில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் 3.1 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை மேலதிக சேவை கால கொடுப்பனவாக பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான ஆனந்த பாலித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை நவம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், மனித வள முகாமையாளர் அஸங்க பெரேரா இறந்து விட்டதாகவும், ஆனந்த பாலித்த மீது பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு குற்றச்சாட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். பணிக்குச் சமூகமளிக்காமல் இவர் மேலதிக சேவைகால கொடுப்பணவை பெற்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கு எதிராக, சந்தேகநபரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன மற்றும் உபுல் ஜெயசூரிய, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக உள்ளதால் பொதுச் சொத்துச் சட்டம் இதற்குப் பொருந்தாது. வங்கி கணக்கிற்குத் தானாக வந்த பணத்தை யாரும் நிராகரிப்பதில்லை எனவும், தொழிற்சங்கத் தலைவரான எமது சேவைபெறுநரின் பேச்சு சுதந்திரத்தில் தடையேற்படுத்துவதுக்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டினர்.
இரு தரப்பு சாட்ச்சியங்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் லியான் வருஷ விதான, சந்தேகநபர் ஆனந்த பாலித்தவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





