தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரணமாகவே மாகாண சபைத்தேர்தல்கள் தாமதம் - இளங்குமரன் எம்.பி.
மக்களை தவறாக வழிநடத்தி அதனூடாக அரசியல் செய்த எதிர்க்கட்சியினர் தற்போது அதே பழைய அரசியல் கலாசாரத்தையே தொடர்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளின் காரணமாகவே மாகாணசபைத் தேர்தல்கள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராக விடக் கூடாது என்பதற்காக தேர்தலை நடத்த முடியாதவாறு சட்டச் சிக்கல்கள்களை தமிழ் கட்சிகள் உருவாக்கின என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் 17-11-2026 அன்று இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைக்கு நிதி ஒதுக்கவில்லை என்று இனவாத ரீதியில் தோல்வி கண்ட அரசியவ்வாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.மாகாண சபைகள் தேர்தலுக்காகவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் தேர்தல்கள் பின்னோக்கி போவதற்கு காரணம் 2016ஆம் ஆண்டில் இதே தமிழ்த் தேசியக் கட்சிகளின் குடும்பிச் சண்டையினாலும் தேர்தலை வைக்கக்கூடாது என்ற சுத்துமாத்துக்களாலுமே தேர்தல் பிற்போடப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் பதவி வகித்தார். திரும்பவும் அவர் போட்டியிட தயாராகவிருந்தார். இது தொடர்பில் அவர்களுக்குள்ளேயே குடும்பிச் சண்டை இருந்தது. இதனால் தேர்தலை நடத்தினால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டேனும் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவார் என்ற எண்ணத்தில் சுத்துமாத்துகளுடன் சேர்ந்து இந்த தேர்தலை சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாக்கியவர்கள் இவர்களேதான்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்து நடத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரையில் புதிய முறையில் அதிகமான இளைஞர்களை உள்வாங்கி, பெண்களையும் விகிதாசாரத்தில் அதிகரித்து தேர்தலை நடத்த முன்மொழிந்துள்ளோம்.
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட ஒட்டுமொத்த மக்களின் நலன்களையும், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தான் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தி அதனூடாக அரசியல் செய்த எதிர்க்கட்சியினர் தற்போது அதே பழைய அரசியல் கலாசாரத்தையே தொடர்கிறார்கள்.
வரவு - செலவுத் திட்டம் நிலையான பொருளாதார இலக்கை நோக்கமாக கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் உச்ச பயன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். என்றார்.





