பலங்கொட கஸ்ஸப தேரருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிணை
பலங்கொட கஸ்ஸப தேரர் இந்த இரண்டு நிபந்தனைகளையும் மீறிச் செயற்பட்டுள்ளதாகச் கடந்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது.
விழக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேரர் சிறைச்சாலை அதிகாரிகளால் 17-11-2026 திருகோணமலை நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பலங்கொட கஸ்ஸப தேரர் தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகி, தமக்கு வழங்கப்பட்டிருந்த நிபந்தனையுடன் கூடிய பிணை விதிகளை மீறி திருகோணமலை நீதிமன்றத்திற்கும் அனுராதபுர நீதிவான் தொடர்பிலும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்டதுடன், அந்தத் தவறை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து குறித்த குற்றங்கள் இரண்டிற்கும் மன்னிப்புக் கோரினார்.
இதனைக் கருத்திற்கொண்ட நீதிவான், முந்தைய பிணையுடன் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு புதிய பிணைகளில் கஸ்ஸப தேரரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் (11) ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது, இதன்போது மன்றில் முன்னிலையாகாத பலங்கொட கஸ்ஸப தேரரை, நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
ஏற்கனவே புத்தர் சிலை வழக்கில் கஸ்ஸப தேரருக்குப் பிணை வழங்கப்பட்ட போது அனைத்து வழக்குகளுக்கும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும், வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு எந்தவொரு கருத்தும் தெரிவிக்கக் கூடாது எனவும் இரு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
பலங்கொட கஸ்ஸப தேரர் இந்த இரண்டு நிபந்தனைகளையும் மீறிச் செயற்பட்டுள்ளதாகச் கடந்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கடந்த 13 ஆம் திகதி அனுராதபுரம் ரூவன்வெலிசாய விகாரை அமைந்துள்ள பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையால், கஸ்ஸப தேரரை சிறைச்சாலை அதிகாரிகள் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.





