2022 மே 9 வன்முறை; 6 பிரதிவாதிகள் விடுதலை
2023 ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2022 மே 9 வன்முறையின் போது பொரலஸ்கமுவ நகர சபையின் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து, பிரதிவாதிகளை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பகுப்பாய்வு செய்ததில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படாத சிறுகுற்றங்கள் தொடர்பில் இவ்வழக்கின் முதலாவது, 2ஆவது மற்றும் 6ஆவது பிரதிவாதிகளை குற்றவாளிகளாக கண்ட நீதிமன்றம் , அவர்களுக்கு தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.
இதற்கமைய, முதலாவது பிரதிவாதியான இந்திரஜித் நிஹால் அத்துகோரளவிற்கு 3 மாத கால சிறைத் தண்டனையும், 2ஆவது பிரதிவாதியான சஹான் சதுரங்கவிற்கு 8 மாத கால கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 3 மாத கால சிறைத் தண்டனையும், 6ஆவது பிரதிவாதியான ருவன் லக்மாலுக்கு தலா 8 மாதங்கள் வீதமான இரு கடூழியச் சிறைத் தண்டனைகளையும் விதித்த நீதிபதி, அச்சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் 3ஆவது பிரதிவாதியான பிரதீப் சமந்த, 4 ஆவது பிரதிவாதியான நாமல் திமுத்து குமார, 5ஆவது பிரதிவாதியான கிரிபன்ன கமலஜித் மற்றும் 6 ஆவது சந்தேகநபரான ருவன் லக்மால் ஆகியோர் வழக்கிலிருந்து நிரபராதிகள் என வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
மே 9 வன்முறையின் போது பொரலஸ்கமுவ நகர சபைக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களான 3 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவுக்கம் அதிக பெறுமதியான ஜீப் வண்டி, மதிப்பீட்டு அறிக்கை மற்றும் நகர சபையின் பிரதான வாயில் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றிற்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
2023 ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு இப்பிரதிவாதிகளினால் நகர சபையில் பணியாற்றும் 10 உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி, அச்சுறுத்தி, குற்றவியல் ரீதியில் அழுத்தம் பிராயகித்தமை தொடர்பிலும் தண்டனைச் சட்டக்கோவையின் 146 ஆம் பிரிவுடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய 344 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இவர்கள் புரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.





