2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டத்துறை மாற்றத்திற்கும் வழிவகுக்கும் - பிரதியமைச்சர் சுனில் வடகல
சமூகத்தின் தேவைக்கேற்ப புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அரசாங்கம் மேற்கொள்ளும்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார மாற்றத்திற்கும், சாதகமான சட்டத்துறை மாற்றத்திற்கும் வழிவகுக்கும் இரட்டை உந்துசக்தியாக அமைந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதியமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-11-2026 அன்று இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இந்த வரவு செலவுத் திட்டம் சலிப்பூட்டுவதாக விமர்சித்திருந்தார்.வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்களைப் புரிந்துகொள்ள எதிர்க்கட்சியினர் தவறியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது ஜனாதிபதியே அதன் பல்வேறு அம்சங்களை எதிர்க்கட்சியினருக்கு விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு நடவடிக்கை ஐந்து மணித்தியாலங்கள்வரை நீடித்தது.
தெளிவானதும், சிறந்ததும், அர்த்தமுள்ளதுமான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியினர் அதனை விமர்சிப்பதையே தெரிவு செய்துள்ளனர்.
இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களின் ஆணையைப் பெற்ற அரசாங்கம் என்பதால், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை. நாட்டின் 81ஆவது வரவு செலவுத் திட்டமான இது மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும்.
மேலும் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் இருந்த காணிகளையே அரசாங்கம் பொறுப்பேற்றது.முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அந்தக் காணிகளை மீண்டும் விவசாயச் செய்கைக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அவை மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டன. மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதைவிட சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ளும் நிலையை நாடு எட்டியுள்ளது.
அதேநேரம் சமூகத்தின் தேவைக்கேற்ப புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அரசாங்கம் மேற்கொள்ளும்.
புதிய பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் இத்தகைய சமூக தேவைகளின் அடிப்படையிலாகும் என்றார்.





