கடுமையான சட்டங்களை பிரயோகியுங்கள்: சிறீநாத் எம்.பி.வலிறுத்து
நகரங்களிலும் போதைப் பொருள் கடத்தப்படும் கடற்கரை கிராமங்களிலும் போதைப் பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அத்துடன் சட்டவிரோத மதுபாவனையும் அதிகரித்துள்ளது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட,கிழக்கு மாகாண இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை முழு இலங்கையையும் ஆக்கிரமித்துள்ளது.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சி யின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறீநாத் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 19-02-2026 அன்று நடைபெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:
யுத்தம் முடிவடைந்த பின்னர் திட்டமிட்ட முறையில் வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட போதைப் பொருள் பாவனை இன்று நாடு முழுவதும் அதிகளவில் வியாபித்து நாட்டை சீரழிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. இந்த போதைப் பொருள் இளம் தலைமுறையினரை மிகவும் பாதிக்கின்றது. குடும்பங்களும் சீரழிந்துள்ளன.
2024ஆம் ஆண்டின் புள்ளிவிபர அறிக்கையின்படி 2 இலட்சத்து 28ஆயிரத்து 450 பேர் கைது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் உள்ளிட்ட குற்றங்களால் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 68 ஆயிரம் பேர் ஐஸ் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்களே. அத்துடன் இவர்களில் அதிகமானவர்கள் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாகும். கைது செய்யப்பட்டவர்கள் இந்தளவில் இருந்தால், கைது செய்யப்படாமல் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இருக்கலாம் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
நகரங்களிலும் போதைப் பொருள் கடத்தப்படும் கடற்கரை கிராமங்களிலும் போதைப் பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அத்துடன் சட்டவிரோத மதுபாவனையும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அப்பாவி மக்களின் பணத்தை உரிஞ்சும் செயற்பாடாக இது இருக்கின்றது. இதனை கட்டுப்படுத்த போதுமான சட்டம் இல்லை. இதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் சம்பாதிக்கின்றனர்.
இதனால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்து இருக்கின்றன. இதனால் சமூகத்தில் போதைப்பொருளில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்காக போதுமான வேலைத்திட்டங்கள் இல்லாமல் இருக்கின்றன. அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





